பெண்களின் மார்பகங்களில் ஏதேனும் வலியோ கட்டியோ ஏற்பட்டால் அவர்கள் தாங்களே முதற்கட்டமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்பகப் புற்றுநோய் குறித்தும் டாக்டர் கல்பனா விளக்குகிறார்.
பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இந்த நோய் ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய நிறைய பரிசோதனை முறைகள் இருக்கின்றன. 40 வயதுக்கு மேல் பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். மார்பகக் கட்டி இருக்கிறதா என்பது பரிசோதனையில் தெரிந்துவிடும். இதைவிட சுயபரிசோதனை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியம். மார்பகக் கட்டி பற்றி வெளியில் பேசவே நாம் யோசிக்கிறோம். அந்த நிலையில் தான் சமூகம் இருக்கிறது.
ஆரம்ப நிலையில் வெளியே சொல்ல வெட்கப்படுவதால், மிகுந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இப்போது கல்வியறிவு அதிகமாகியுள்ளதால் இதுகுறித்த புரிதல் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பரிசோதனைகள் செய்துகொள்கின்றனர். புற்றுநோய் அல்லாத கட்டி, புற்றுநோய் உள்ள கட்டி என்று இருவகையான கட்டிகள் இருக்கின்றன. இதை நாம் சுயபரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். மாதவிடாய் காலத்தில் மார்பகங்களை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ளலாம். இதில் எந்தவிதமான தவறும் இல்லை. குளிக்கும்போது இதைச் செய்வது எளிதானது.
புற்றுநோய் வந்துவிட்டாலே வாழ்க்கை அவ்வளவுதான் என்று எண்ணிய காலம் ஒன்று இருந்தது. இப்போது அப்படியில்லை. நோயை நாம் கண்டறிந்து நம்மால் மருத்துவம் செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு வகையான சிகிச்சை இருக்கிறது. சிகிச்சை முடிந்த பிறகு நிச்சயமாக சாதாரண வாழ்க்கையை நம்மால் தொடர முடியும்.
சமுதாயத்தின் தவறான புரிதல்களுக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. இப்போது நிறைய அறுவை சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இதன் மூலம் நம்முடைய ஆயுளையும் அதிகரிக்க முடியும். நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தான் அவசியம். இதற்கு சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். மம்மோகிராம் பரிசோதனை என்பது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான இடைவெளியில் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். உணவே இப்போது விஷமாக மாறி வருவதால் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். கீமோதெரபியில் மட்டும் தான் சற்று வலி இருக்கும். ரேடியோதெரபி சிகிச்சையில் வலி குறைவு அதைக் கூட எடுத்துக்கொள்ளலாம்.