மயக்க மருந்து குறித்த புரிதலை நமக்கு உண்டாக்குகிறார் மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா.
சினிமாவில் ஒரு துணியில் தண்ணி போல ஏதோ ஒன்றை தெளித்து மூக்கில் வைப்பார்கள் உடனே மயங்கி விடுவார்கள். அல்லது ஸ்பிரே போன்று ஏதோ ஒன்றை அடித்ததும் மயங்கி விடுவார்கள் என்று காண்பிப்பது உண்டு. அப்படி யாரையும் உடனடியாக மயக்கமாக்கி விட முடியாது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. கைகளில், முதுகில், தோள்பட்டையில், கால் பாதங்களில் எனப் பல்வேறு வகைகளில் செலுத்தப்படுகிற மயக்க மருந்து உண்டு. குறிப்பிட்ட இடத்தில் ஒரு சின்ன கட்டியை நீக்குகிறோம் என்றால் அதைச் சுற்றி வலி மரத்துப் போகும் தன்மைக்காக மயக்க மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்படும்.
18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக கொடுத்து மயக்க நிலைக்கு செல்ல வைத்து அறுவை சிகிச்சை செய்வார்கள். ஆனால் அது வலியை ஏற்படுத்தச் செய்யும். ஆனால் முறையான மயக்க மருந்து ஊசி வந்த பிறகு வலியின் தன்மை மரத்துப்போகச் செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து ஊசி போடப்படும். அது இடுப்பிற்கு கீழே மரத்துப்போகச் செய்யும். ஆனால் உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டது போன்ற உணர்விலும் இருக்கச் செய்யும். அதே சமயத்தில் குழந்தை பிறந்த உடனேயே அதன் அழுகுரல் கேட்டதுமே தாயால் அந்த குழந்தையை தொட்டு தடவிப் பார்க்கும் அளவிற்கு உணர்வும் இருக்கும். முழு அனஸ்தீசியா கொடுக்காமல் முதுகுத் தண்டில் மட்டும் கொடுக்கும் மயக்க மருந்து ஊசியால்தான் உங்களுக்கு பிரசவம் நடக்கிறது.
பிரசவ வலியைப் போன்று உலகில் வேறு எந்த வலியும் கிடையாது. அந்த அளவிற்கு கொடுமையான வலி பிரசவத்தின் போது உருவாகும் வலி. வலியே இல்லாமல் பிரசவத்தினை அறுவை சிகிச்சை மூலமாக செய்வதற்கு தான் அனஸ்தீசியா என்னும் மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பிரசவத்தின் போது கர்ப்பப்பையானது கரு முழு வளர்ச்சி அடைந்து விட்டது என்று வெளியேற்றும் வேலையை செய்யும் அதனால்தான் பிரசவத்தின் போது வலி ஏற்படுகிறது.
சுயமாகவே குழந்தை வெளியே வரும்போதும் வலி ஏற்படும். அதை தாங்க முடியாத நிலையில் லேபர் அனஸ்தீசியாவின் தேவை குறித்து கர்ப்பிணிகளுக்கு தெரிவித்து அந்த ஊசியை செலுத்தும்போது வலியற்று குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும்.