மூலம் நோய் ஏன் வருகிறது. அதற்கான காரணத்தையும் சிகிச்சை முறையையும் நமக்கு பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்குகிறார்.
மலம் கழிக்கும்போது ஆசன வாயிலில் ஒரு தசை போல் வெளியே வரும், சிலருக்கு தசை உள்ளே போகும், சிலருக்கு வெளியேவே இருக்கும், இரத்தம் வரும். எல்லாருமே இரத்தம் வந்தால் மூலம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மூலத்திற்கும், பெளத்திரத்திற்கும், ஆசனவாய் கிழிந்து ரத்தம் வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. சிலர் எல்லாவற்றையுமே மூலம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அது ஒருவகை புற்றுநோயாகக் கூட இருக்கலாம்.
மூலம் என்பது மலச்சிக்கல் பிரச்சனையால் உருவாகிற ஒரு நோய் ஆகும். மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்கிறவர்களுக்கு ஒட்டுமொத்த அழுத்தமும் அடிப்பகுதிக்குச் சென்று இரத்தக்குழாய் விரிவடையும் தன்மையே மூலம் ஆகும். இரத்தக்குழாய் விரிவடைந்து ஆசனவாயிலில் வந்து நிற்கும், சிலருக்கு அது உரசி உரசி இரத்தம் வர ஆரம்பிக்கும். வழியே இல்லாமல் இரத்தம் கொட்டும்.
மூலத்தினை உள் மூலம், வெளி மூலம், வெளியே வந்து உள்ளே போவது, உள்ளேயே இருந்து கொள்வது, வெளியே வந்து வெளியேவே தங்கி விடுவது என்று நிலைகள் உள்ளது. ஆரம்ப கட்ட மூலத்தினை வெறும் மருந்து, மாத்திரை, உணவு முறை மாற்றங்கள் வைத்து சரி செய்து விட முடியும். ஆனால் அதற்கு அடுத்த நிலையின் போதுதான் அறுவை சிகிச்சை நிபுணரை அணுக வேண்டிய தேவை ஏற்படுகிறது. மருத்துவர்கள் அது கல்லீரம் சார்ந்த மூலமா, உடற்பருமனால் வந்த மூலமா என்று பரிசோதித்து சிகிச்சையை ஆரம்பிப்பார்கள்.
சிறிய வயதிலேயே மூல நோய் வருவதற்கு காரணம் என்னவென்றால் ஒழுங்கா மலம் கழிக்க சொல்லிக் கொடுக்காததுதான். அதோடு ஜங்க் புட் உணவு வகைகள், பிஸ்கட் போன்றவை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்பட்டு ஒழுங்காக மலம் கழிக்க முடியாத நிலைக்கு உள்ளாகி இரத்தக் குழாய்கள் அழுத்தம் கொடுத்து மூலப்பிரச்சனை சிறு வயதிலேயே வந்து விடுகிறது.
குழந்தைகளின் சிகிச்சைக்காக வருகிற பெற்றோர்களிடம் மலம் கழிக்க குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தீர்களா என்றுதான் முதலில் கேட்போம். சொல்லித் தரவில்லை எனில் எப்படி உட்கார வேண்டும் என்பதையும், ஆசனவாய் மலம் கழிக்க ஏதுவானதாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துவிட்டு அதற்கென ஜெல்லி உள்ளது அதை வாங்கி இரவில் தூங்கும்போது பயன்படுத்தச் சொல்லி ஆலோசனை வழங்குவோம். பிறகு உணவில் நார்ச்சத்து உள்ள கீரைகள், காய்கறிகள் சாப்பிட சொல்வோம். இதைப் பின்பற்றினாலே மூலம் வராமல் காக்கலாம். மூலம் நோயின் தீவிரத்தன்மை உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.