நோயாளிகளுக்கு இருக்க வேண்டிய பொறுமை பற்றியும் நோயின் தன்மை குறித்து மருத்துவர்கள் செய்யும் பரிசோதனைகள் குறித்தும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்
ஒரு பெரியவரை அவருடைய மகன் என்னிடம் அழைத்து வந்தார். கால் வலியோடு அவர் வந்தார். அவரை நான் பரிசோதித்தேன். காலில் அடிபட்டுவிட்டது, ரத்தம் வருகிறது என்று அவர் கூறினார். அவரை உட்கார வைத்து நாடி பார்த்தேன். அவருக்கு என் மீது கோபம் வந்தது. அவருக்கு காலில் அடிபட்டுள்ள நிலையில் நான் ஏன் நாடி பார்க்கிறேன் என்பது தான் அவருடைய கோபத்துக்கான காரணம். அவருக்கு காலில் ரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. முதலில் நாடி பார்ப்பது என்னுடைய வழக்கம்.
அதன் பிறகு அவருக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று நான் சோதித்தேன். அவருடைய கோபம் அடுத்த கட்டத்துக்கு சென்றது. காயம் குறித்து கேட்டபோது, சாப்பிட்டு எழும்போது டைனிங் டேபிளில் இடித்துக்கொண்டதாக அவர் கூறினார். எத்தனை வருடங்களாக அவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்று கேட்டேன். தன்னுடைய தாத்தா காலத்து வீடு அது என்று அவர் கூறினார். டைனிங் டேபிளும் நீண்ட காலமாக வீட்டில் இருக்கிறது என்று அவர் சொன்னார். இப்போதுதான் முதல் முறையாக அதில் இடித்துக்கொண்டதாக அவர் கூறினார்.
என்னிடம் அழைத்து வந்ததற்காக அவருடைய மகனை அவர் திட்டினார். ஒரு பக்கம் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே போவதால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இவை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். அந்தப் பெரியவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அவருக்கு ரத்த அழுத்தம் இருப்பதே அவருக்குத் தெரியவில்லை. குறிப்பிட்ட அந்த நாளில் ரத்த அழுத்தம் அவருக்கு அதிகமானதால் தான், மயக்க நிலை ஏற்பட்டு அவர் டைனிங் டேபிளில் இடித்துக்கொண்டார்.
அடிபட்டதற்கான சிகிச்சை மட்டும் அவருக்கு நான் கொடுத்தால் போதும் என்று அவர் விரும்பினார். ஆனால் ஒரு நல்ல மருத்துவர் எப்போதுமே பிரச்சனைக்கான மூலக் காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைய வேண்டும். இதற்கான பொறுமையும் அர்ப்பணிப்பும் இன்று நோயாளிகளுக்கு இல்லை. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ அதை மட்டுமே பார்ப்பது தவறு. என்னுடைய 52 ஆண்டு கால மருத்துவ வாழ்க்கையில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் இந்த மனநிலை மாற்றத்தை ஒரு முக்கியமான மாற்றமாக நான் பார்க்கிறேன்.