Skip to main content

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? - ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Dr. C Rajendiran - Goverment hospital - health care

 

சரியான வகையில் உணவு உண்ணும் முறை குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்

 

அனைவருக்கும் ஏன் வியாதி வருவதில்லை என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். தங்களுக்கு மட்டும் நோய்கள் ஏற்படுவது ஒரு சாபம் என்று பலர் நினைக்கின்றனர். சிலருக்கு பிறக்கும்போதே மரபணு சார்ந்து வியாதிகள் ஏற்படுகின்றன. சிலருக்கு வாழும் முறை, பழக்கவழக்கங்கள் சார்ந்து வியாதிகள் ஏற்படுகின்றன. உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுப் பழக்கம் மிகவும் முக்கியம். நாம் உணவு உண்ணும் முறைக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது. ஆரோக்கியமான முறையில் நாம் உணவு உண்ண வேண்டும். 

 

வயிற்றுப் பசி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய அன்றாட வேலைகளைச் செய்வதற்கு நமக்குள் ஒரு எரிபொருள் தேவை. அதைக் கொடுப்பது உணவுகள் தான். 2020 ஆம் ஆண்டு கொரோனாவின் கோரப்பிடியில் நான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என்னால் சாப்பிட முடியாது. எனக்கு செயற்கை ஆக்சிஜன் கொடுத்து வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 10 நாட்கள் நான் அசராமல் நம்பிக்கையோடு இருந்தேன். அதன் மூலம் கொரோனாவை விரட்டியடித்தேன். அதற்கு கடவுளும் என் மீது அன்பு கொண்டவர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். 

 

அந்த நேரத்தில் என்னுடைய எடை 21 கிலோ குறைந்திருந்தது. அப்போது என்னால் மிகவும் குறைவாகவே சாப்பிட முடிந்தது. உடல் எடையைக் குறைப்பதில் நம்முடைய உணவுப் பழக்கம் முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை சொந்த அனுபவத்தின் மூலம் அப்போதுதான் நான் அறிந்தேன். நம்மையே அறியாமல் தினமும் நாம் சாப்பிடும் தின்பண்டங்களால் அதிகமான கலோரிகளை உள்ளே எடுத்துக்கொள்கிறோம். நாம் வேகவேகமாக சாப்பிடும்போது 'போதும்' என்கிற உணர்வு விரைவாக வந்துவிடும். இதனால் ஜீரணமும் கஷ்டமாகும். 

 

மெதுவாக சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் அதிகமான உணவை எடுத்துக்கொள்கிறார்கள். உணவின் அளவை அவர்களால் குறைக்க முடியாது. எனவே வேகமாக சாப்பிடுவதும் தவறு, மிகவும் மெதுவாக சாப்பிடுவதும் தவறு. உணவை உண்பதற்கு 15 நிமிடங்களை ஒதுக்கி ஆற அமர சாப்பிட வேண்டும். உணவைப் பொறுமையாக மென்று சாப்பிடும்போது வயிறு நிரம்பும் உணர்வும் கிடைக்கும், திருப்தியடைந்த உணர்வும் கிடைக்கும். உணவின் அளவு மற்றும் தரம் மிகவும் முக்கியம். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பதும் தவறு. இதனால் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகி, இன்னும் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்.

 

 

 


 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.

Next Story

பன்றிக் காய்ச்சல் நுரையீரலை பாதிக்குமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 Dr Rajendran | Swine flu 

மழைக் காலங்களில் பரவக்கூடிய பல்வேறு வகையான காய்ச்சலைப் பற்றி நமக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் விளக்குகிறார்.

இன்றைய காலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு தவிர மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் ஆகும். ஸ்வைன் ப்ளூ ஹெச்1 என் 1 இன்புளுயன்சா வைரஸ், இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடியது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடிக்கும்போது அதனால் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். 

ஆனால் பன்றிக் காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வருகிற மூச்சுக்காற்று, இருமல், சளி ஆகியவற்றாலும், கை, கால் ஆகியவற்றைக் கொண்டு எங்கெல்லாம் தொடுகிறோமோ அதன் மூலம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. 

பன்றிக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தீவிரமான உடல் சூட்டோடு காய்ச்சல், உடல் வலி, வரட்டு இருமல், கடுமையான தலைவலி, தொண்டை வலி ஏற்படும். மருத்துவர்கள் தொண்டை வலி என்றதும் தொண்டையை பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் அங்கே வலியால் வீங்கியோ அல்லது சிவந்து போயோ இருக்காது இப்படியாக எந்த அறிகுறிகளுமே இல்லாமல் கடுமையான தொண்டை வலி ஏற்பட்டால் அது பன்றிக் காய்ச்சல் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

நோயின் தீவிரத்தன்மையை அறியாமல் சாதாரண காய்ச்சல்தான் என்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலை நோக்கி காய்ச்சல் நகரக்கூடும் இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.  

பன்றிக் காய்ச்சல் என்றதும் நாங்கள் பன்றிக்கறி எதுவும் சாப்பிடவில்லையே, பன்றியிடம் அருகில் எதுவும் போகவில்லையே என்று நினைப்பார்கள். அது காய்ச்சலை வேறுபடுத்த வைக்கப்பட்ட பெயராகும். காய்ச்சலின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து உறுதிசெய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையையோ, மருத்துவரையோ அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.