ஒற்றைத் தலைவலி பிரச்சனை குறித்த பல்வேறு தகவல்களை ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம் அளிக்கிறார்.
அனைத்து வயதினருக்கும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படும். குடும்பத்தில் முதியவர்களுக்கு இருந்தால் இளையோருக்கும் வர வாய்ப்பிருக்கிறது மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசு அடைந்திருப்பதன் காரணமாகவும் இது ஏற்படலாம். மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் பிரச்சனை காரணமாகவும் இந்த நோய் ஏற்படலாம். இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஒற்றைத் தலைவலியில் வலது அல்லது இடதுபுறம் கடுமையான வலி இருக்கும். இந்தப் பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு வாந்தி வரும். கொஞ்சம் அதிகமான சத்தத்தைக் கேட்டால் கூட தலைவலி ஏற்படும். இந்த நோய்க்கு பல்வேறு அறிகுறிகள் உள்ளன.
ஆரம்ப கட்டத்தில் இதற்கான அறிகுறிகள் முன்பே நமக்கு தெரியும். மலச்சிக்கல், அதிக முறை சிறுநீர் கழித்தல், அதிகமாக கொட்டாவி விடுதல், உடம்பு ஊதியது போல் இருத்தல், மனநிலை மாற்றம் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். அடுத்த கட்டங்களில் வாந்தி எடுத்தல், வித்தியாசமான வாசனைகள் ஒத்துக்கொள்ளாமல் இருத்தல், பேசுவதில் சிரமம் ஏற்படுதல், முகத்தில் ஒரு பகுதியில் மட்டும் இறுக்கம் ஏற்படுதல் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். சரியாகத் தூங்கவில்லை என்றால் தலைவலி நிச்சயம் ஏற்படும்.
இதன் மூலம் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதிக உடற்பயிற்சி அல்லது வேலைப்பளு காரணமாக உடல் தளர்ச்சி ஏற்படும்போது ஒற்றைத் தலைவலியும் ஏற்படும். ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். சில குறிப்பிட்ட மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
காலநிலை மாற்றம் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். அனைத்து வயதினருக்கும் இது ஏற்படும். மன அழுத்தம் காரணமாக மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும்போது இந்தப் பிரச்சனை ஏற்படும். அதனால் சரியான அளவில் தூக்கம் வராது. ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு ஹோமியோபதியில் நல்ல மருத்துவம் இருக்கிறது. நோயின் வரலாற்றை நாங்கள் முதலில் ஆராய்வோம். நோயாளியின் உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றில் என்னென்ன மாற்றங்களை நாம் கொண்டுவர முடியும் என்பதை ஆராய்வோம். அதற்கு ஏற்றவாறு சிகிச்சைகளை நாங்கள் வழங்குவோம்.