பக்கவாதம், முடக்குவாதம் குறித்து நாம் அறியாத பல்வேறு தகவல்களை டாக்டர் அருணாச்சலம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்...
தற்போது சிறு குழந்தைகளுக்கும் பக்கவாதம் ஏற்படும் நிலை இருக்கிறது. வைரஸ் தொற்றுகளால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. முடக்குவாதம் என்பது பெரும்பாலும் மூட்டு பகுதிகளில் தான் ஏற்படும். இது காலை நேரத்தில் அதிகமான வலியை ஏற்படுத்தும். நேரம் செல்லச் செல்ல வலி குறைவது போன்று இருக்கும். வீக்கம் அதிகமாக இருக்கும். இந்த வலி பெரும்பாலும் திடீரென்று தான் ஏற்படும். வேறு நோய்க்கிருமிகள் நம்மைத் தாக்கும்போது அதற்கான மருந்துகளை நாம் சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும்.
இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். முடக்குவாத நோயைக் கண்டறிவதற்குப் பல்வேறு வகையான பரிசோதனை முறைகள் இருக்கின்றன. பரிசோதனைகளில் நோய் உறுதியானால் அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும். இந்த நோயை வரவிடாமல் தடுக்கும் மருந்துகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களை முடக்கி விடாமல் தரமான ஒரு வாழ்க்கையை வாழ வைப்பதற்கான மருந்துகள் இருக்கின்றன. முந்தைய சந்ததியினருக்கு இந்த நோய் இருந்தால் அது நமக்கும் வர வாய்ப்பிருக்கிறது.
முடக்குவாதம் என்பது பொதுவாக 45 வயதுக்குள் தொடங்கும். அதன் பிறகு தொடர்ந்து அதிகரிக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து சரியான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் அதன் பாதிப்புகளை முடிந்த அளவு குறைக்கலாம்.