சருமத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து நம்மிடம் டாக்டர் அருணாச்சலம் விவரிக்கிறார்.
உடலில் தோல் என்பது ஒரு முக்கியமான அரண். அதுதான் நம் உடலைப் பாதுகாக்கிறது. தோலில் வரும் கட்டிகளுக்கு முக்கியமான காரணம் தோல் கிழிவது தான். கிருமிகளிடமிருந்து நமக்கு பாதுகாப்பு தருவது நம்முடைய தோல் தான். வெயில் அதிகமாக அடிக்கும்போது வியர்வை வரும். அதன் மூலம் சூடு நம் உடலைத் தாக்காமல் இருக்கும். அந்த வகையில் வியர்வைச் சுரப்பிகள் நம்மைப் பாதுகாக்கின்றன.
பல்வேறு நோய்கள் இப்போது தோல் வியாதிகளாக வருகின்றன. தூசியில் அதிகம் வேலை செய்பவர்கள் உடலை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கோடை காலத்தில் வியர்க்குரு மூலமும் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். குளியல் மூலம் அதைத் தடுக்க முடியும். தலைக்கு குளித்தால் சளி பிடிக்கும் என்று இங்கு பலர் தவறாக நினைக்கின்றனர். பல்வேறு கெமிக்கல்களால் மூக்கு பாதிக்கப்படுவதால் தான் சளி பிடிக்கும்.
அதிக குளிர்ச்சியான நாட்களில் கூட கேரள மக்கள் தலைக்கு குளிக்காமல் இருப்பதில்லை. அவர்களுக்கு அதனால் சளி பிடிப்பதில்லை. தலைக்கு குளிப்பது என்பது மிகவும் முக்கியம். வியர்வை அதிகமாக இருக்கும்போது தலைக்கு குளிப்பதால் தான் வியர்வை மூலம் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க முடியும். தோலில் உள்ள அழுக்குகளைக் கழுவி சுத்தப்படுத்துவது தான் குளியல். உடல் சூடு தணிவதற்கும் குளியலுக்கும் சம்பந்தமில்லை. நீர் ஆகாரங்களின் மூலம் தான் உடல் சூட்டைத் தணிக்க முடியும்.