பச்சை உணவுகள் குறித்தப் பல்வேறு தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஆதி மனிதர்கள் என்ன சாப்பிட்டிருப்பார்கள் என்பதை ஆராயும்போது பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. அவர்கள் பச்சை மாமிசங்களை உண்டனர். விலங்குகளை வேட்டையாடி உண்டனர். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விலங்குகளை சுட்டு அவர்கள் சாப்பிட்டனர். வேட்டைக்கு செல்ல முடியாத காலங்களில் விலங்குகளின் மிச்ச உணவுகளை அவர்கள் உண்பார்கள். மரத்தில் இருக்கும் பழங்களையும் அவர்கள் உண்டனர். இதையெல்லாம் சாப்பிட்டு அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்திருக்கின்றனர்.
ஆதி மனிதர்களை உதாரணமாக வைத்துக்கொண்டு பச்சை உணவுகளை மட்டுமே சாப்பிடும் பழக்கத்தைப் பலர் பின்பற்றி வந்திருக்கின்றனர். உயிரோடு இருப்பவைகளை நாம் சமைக்கும்போது அவை செத்து விடுகின்றன. அதன் பிறகு அவை ஆரோக்கியத்திற்கு கேடாக அமைந்து விடுகின்றன என்பது அவர்களுடைய வாதம். சிலர் 70% பச்சையாகவும் 30% சமைத்தும் உண்ணும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். பச்சை உணவில் நமக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இருக்கின்றன என்று சிலர் கூறுகின்றனர்.
பச்சை உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்ட ஒரு விளையாட்டு வீரருக்கு மூளையில் பூச்சி சென்று தாக்கியதால் உயிரிழந்தார். பச்சை உணவுகளில் நல்ல மைக்ரோப், கெட்ட மைக்ரோப் என்று இரண்டுமே இருக்கிறது. இப்போது உள்ள உணவுகளில் கெட்ட மைக்ரோப் தான் அதிகம் இருக்கிறது. அதனால் சமைத்து உண்ணும்போது இவை அனைத்தும் வெளியேறும். சாலட் செய்யும்போது கூட காய்கறிகளை நன்றாகக் கழுவிவிட்டே செய்ய வேண்டும். அப்போதுதான் காய்கறிகளில் இருக்கும் புழுக்கள் நம்மைத் தாக்காமல் இருக்கும்.
பச்சையாக உணவுகளை உண்ணும்போது இன்று அது எந்த அளவுக்கு நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது தெரியவில்லை. இதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை விட இதுவும் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இதை ஒரு கொள்கையாகவே சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். உடலுக்கு எது ஆரோக்கியமோ, மருத்துவர்கள் நமக்கு எதைப் பரிந்துரைக்கிறார்களோ, அதை நாம் பின்பற்றுவது தான் எப்போதும் மேலானது. தொடர்ந்து பச்சை உணவு சாப்பிடுவதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும். அப்படியும் பலர் இங்கு இருக்கின்றனர்.