ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது. அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யு.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam).. இது இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந் தெடுக்கும்வகையில் இருக்கும். முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது.
இரண்டாம் தாள், திறனறிவைக் கூர்தீட்டக்கூடியது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே அடுத்த நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்குச் (Main Exam) செல்ல முடியும். முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.
முதன்மைத் தேர்வில் நான்கு பொது அறிவு தாள்களும், ஒரு விருப்பப் பாடம் (Optional Subject) சார்ந்த இரண்டு தாள்களும் இருக்கின்றன. ஒரு கட்டுரை வடிவில் ((Essay) தாள் ஒன்றும், ஆங்கில மொழி தாள் ஒன்றும், இந்திய மொழிகளில் ஒரு தாளும் இருக்கின்றன. ஆகமொத்தம், ஒன்பது தாள்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண். இதில் ஆங்கிலமொழி தாளுக்கான மதிப்பெண்ணும், இந்திய மொழி தேர்வுக்கான மதிப்பெண்ணும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது.
இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படும மதிப்பெண் அடிப்படையில், பெர்சனாலிட்டி தேர்வுக்கு (Personality Interview) அழைக்கப்படுவார்கள். இதில் 275 மதிப்பெண். இதில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதையெல்லாம் கூட்டி அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களின் ரேங்க் பட்டியலில் வெளியிடப்படும். இவ்வாறு பட்டியல் வெளியிடப்படும்போது தேர்வு எழுதுபவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதிநிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படும். அதன்பிறகு பயிற்சி வழங்கப்படும். தகுதிநிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இதை எல்லாம் யு.பி.எஸ்.சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.