Skip to main content

மாணவர் வழிகாட்டி: ஐஐடி, என்ஐடியில் படிப்பதுதான் உங்கள் கனவா? அப்படினா முதல்ல இதை தெரிஞ்சுக்குங்க! #7

Those who have dream to study in IIT and NIT guidance part 7

 

பிளஸ்2 பொதுத்தேர்வில் அறிவியல், கணிதம் பாடப்பிரிவுகள் எடுத்து, ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்ற ஒவ்வொருவரின் தேடலும் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளாகத்தான் இருக்கும். 

 

இன்றைய நிலையில், மருத்துவப் படிப்பிற்குள் நுழைய நீட் தேர்வுதான் ஒரே வழி என்றாகிவிட்டது. ஆனால், அண்ணா பல்கலைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர இன்றைக்கும் பிளஸ்2 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் போதுமானது.

 

ஒருபுறம் பொறியியல் மாணவர்களுக்கு வேலையின்மை அதிகரித்து வந்தாலும், இன்ஜினியரிங் துறைகள் மீதான ஈர்ப்பு பெரிய அளவில் குறைந்து போய்விடவில்லை. இன்றைக்கும், தமிழகத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 530க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொள்கின்றன.

 

எனினும், பி.இ., பொறியியல் பட்டப்படிப்புகளை, கல்லூரிகளில் பயில்வதைக் காட்டிலும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது என்பது மாணவர்களின் அறிவை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள உதவுகிறது. அதற்கு காரணம், அம்மையங்களின் முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள்தான். மேலும், படிப்பை முடிப்பதற்கு முன்பே வேலைவாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகி விடுகிறது.

 

ஐ.ஐ.டி., / என்.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவும்கூட. ஆனால், மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ்2 மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. முதலில் ஐ.ஐ.டி.,யில் வழங்கப்படும் படிப்புகள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

 

படிப்பின் விவரம்: பி.டெக்., (Bachelor of Technology) 

பாடப்பிரிவுகள்: பி.டெக்., இளநிலையில் Aerospace / Agriculture / Biological Science / Biotechnolgy / Ceramic / Chemical / Civil / Computer Science / Electrical / Electrical and Electronics Communication / Electronics / Energy / Instrumentation / Manufacturing Science / Material / Metallurgical / Mechanical / Mineral / Mining/Naval Architecture / Ocean Engineering / Petroleum
Engineering / Production and Industrial / Pulp and Paper / Textile Technology ஆகிய துறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது

 

அடிப்படைக் கல்வித்தகுதி: 

12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்து படித்திருக்க வேண்டும்.

 

படிப்பின் கால அளவு: 4 ஆண்டுகள்

 

தேர்வு முறை: 

 

ஐ.ஐ.டி.,க்களில் சேர 12ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படைக் கல்வித்தகுதி என்றாலும், ஜே.இ.இ., (Joint Entrance Examination) நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதும் அவசியமாகிறது. ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு குறித்து பின்னர் விரிவாக பார்க்கலாம்.

 

இணையதளம்: ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்ததேர்வுகள் பற்றிய கூடுதல் விவரங்களை www.jeemain.nic.in மற்றும் www.jeeadv.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து அறியலாம்.

 

ஐ.ஐ.டி.,க்கள் எங்கெங்கு உள்ளன?: 

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., தமிழகத்தில் சென்னையில் உள்ளது. தவிர, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்க்கி, வாரணாசி, தன்பாத் ஆகிய இடங்களிலும் உள்ளன.

 

வேலைவாய்ப்பு: 

ஐ.ஐ.டி.,க்களில் பி.டெக்., தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற உயர்கல்வி படிக்கலாம். பெரும்பாலும், ஐ.ஐ.டி.,க்களில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும்போதே வளாக தேர்வு மூலம் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் அவர்களைக் கொத்திக்கொண்டு போய்விடுவதுண்டு.


பதக்கம் பெற்ற மாணவர்கள் பலர், எடுத்த எடுப்பிலேயே ஆண்டுக்கு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறக்கூடியவர்களும் இருக்கிறார்கள். 

 

பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப அலுவலர் என பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு மற்றும் தனியார் துறைகளில் உடனடியாக பெறலாம். வெளிநாடுகளிலும் உடனடி வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.


ஐ.ஐ.டி., பற்றிய மேலும் விவரங்களை பின்வரும் இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


IIT Madras – www.iitm.ac.in

IIT Bombay – www.iitb.ac.in

IIT Delhi – www.iitd.ac.in

IIT Guwahati – www.iitg.ac.in

IIT Kanpur – www.iitk.ac.in

IIT Kahragpur – www.iitkgp.ac.in

IIT Roorkee – www.iitr.ac.in

IIT BHU Varanasi– www.iitbhu.ac.in

ISM Dhanbad – www.ismdhanbad.ac.in
 

என்.ஐ.டி., NATIONAL INSTITUTES OF TECHNOLOGY (NIT) பற்றி அறிவோமா?

 

ஐ.ஐ.டி., போல என்.ஐ.டி., என்பதும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனம்தான். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்.ஐ.டி., எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னாலஜி மூலமாக பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகிறது. 

 

students guidance


படிப்பின் விவரம்: பி.டெக்., (Bachelor of Technology)

 

பாடப்பிரிவுகள் (Branches of Engineering): பி.டெக்., BioTechnology / Chemical / BioMedical / Civil / Computer Science / Electrical and Electronics / Electrical and Telecommunication / Electrical / Electronics Communication / Electronics Instrumentation / Industrial Engineering / Information Technology / Instrumentation / Metallurgical / Mechanical / Mining /
Production& Industrial / Textile / Industrial Design / Physics ஆகிய பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.


அடிப்படைக் கல்வித்தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும்.


கால அளவு: 4 ஆண்டுகள்


எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு: ஜேஇஇ எனப்படும் ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் (Joint Entrance Examination). இத்தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக கட்-ஆப் (Cut-Off) மதிப்பெண் பெறுவது அவசியம். நுழைவுத்தேர்வு விவரங்களை www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

என்ஐடி எங்கெங்கு உள்ளன?:

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் என்ஐடி உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரி, குருஷேத்ரா, கொல்கத்தா, டெல்லி, அகர்தலா, துர்காபூர், கோவா, போபால், ஜெய்ப்பூர், அலகாபாத், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், நாக்பூர், பாட்னா, ராஜ்பூர், ரூர்கேலா, சிக்கிம், சில்சார், ஸ்ரீநகர், சூரத், சூரத்கல், உத்தரகாண்ட், வாரங்கல், அருணாச்சல பிரதேசம், ஹமீர்பூர் ஆகிய இடங்களில் என்ஐடி உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன.

 

கல்வியின் பயன்பாடு: ஐஐடியில் படித்தால் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குமோ அதே வரவேற்பு என்ஐடியில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கும் உண்டு.

 

இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே 100 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று விடுவார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஐஐடி, என்ஐடியில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளித்து வேலைக்குத் தேர்வு செய்கின்றன. சுயதொழிலும் தொடங்கலாம். மேலும், எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., போன்ற முதுநிலை தொழில்படிப்புகளையும் தொடரலாம்.

 

** ஜேஇஇ நுழைவுத்தேர்வு குறித்த விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...