Skip to main content

மாணவர் வழிகாட்டி: இன்ஜினியரிங் படிப்பில் இத்தனை பாடப்பிரிவுகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்... #11

Published on 22/08/2020 | Edited on 27/08/2020
students guidance

 

இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக அரசு மற்றும் சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகள் என்றில்லாமல் ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி என பிரத்யேக கல்வி நிலையங்களில் பயில்வது குறித்தும் கடந்த தொடர்களில் பார்த்தோம். 

 

பிளஸ்-2 படிக்கும்போதே இன்ஜினியரிங்கில் பொதுவாக உள்ள சில துறைகளைப் பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்திருக்கக்கூடும். எனினும், இத்துறையில் உள்ள ஒட்டுமொத்த பாடப்பிரிவுகள் குறித்தும் இங்கே பார்க்கலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் சில, குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுவதாகவும் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

படிப்பின் விவரம்: பி.இ., / பி.டெக்., (Bachelor of Engineering / Bachelor of Technology)

 

இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள்: 

 

ஏரோனாட்டிகல், ஆட்டோமொபைல், விவசாயம், கணினி அறிவியல், கட்டிடக்கலை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன், மின்னியல் மற்றும் மின்னணுவியல், ஜியோ இன்பர்மேடிக்ஸ், இண்டஸ்ட்ரியல், மெக்கானிகல், மெட்டீரியல் சயின்ஸ், மைனிங், மேனுபாக்சரிங், பிரிண்டிங், புரடக்ஷன், கெமிக்கல், செராமிக், ஃபுட், இன்பர்மேஷன், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பார்மாசூட்டிகல், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக், டெக்ஸ்டைல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல், எலக்ட்ரானிக் அன்டு டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மரைன் இன்ஜினியரிங், மெட்டலர்ஜிகல், பெட்ரோலியம், ரோபோடிக்ஸ் அன்டு ஆட்டோமேஷன், ஃபேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் வழங்கப்படுகின்றன. 

 

மேற்சொன்ன ஒவ்வொரு துறையும் ஏதோ ஒரு வகையில் தனித்துவம் மிக்கதுதான். எந்த துறையை எடுத்து படித்தாலும் ஆர்வத்துடன், கூடுதல் அறிவையும் வளர்த்து கொள்ளும்போது வேலைவாய்ப்புக்கும் ஒருபோதும் பஞ்சமில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். 

 

அடிப்படைக் கல்வித்தகுதி: அண்ணா பல்கலைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எந்த ஒரு இன்ஜினியரிங், கல்லூரியில் சேர்வதற்கும் பிளஸ்-2 தேர்ச்சி போதுமானது. 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்தவராக இருக்க வேண்டும். அல்லது, பிளஸ்-2வில் Vocational Group எனப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும்.

 

படிப்பின் கால அளவு: 4 ஆண்டுகள்


தேர்வு முறை:

12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாநில கலந்தாய்வு முறையில் இன்ஜினியரிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


தொடர்புடைய துறை: அண்ணா பல்கலைக்கழகம்


இணையதள முகவரி:

www.annauniv.edu
www.annauniversitycounselling.com,  www.tndte.ac.in


இன்ஜினியரிங், கல்லூரிகள் விவரம்: 


1. அண்ணா பல்கலைக்கழகம் - 2 வளாகங்கள் (கிண்டி, குரோம்பேட்டை வளாகம்)

2. அண்ணா பல்கலை வளாக கல்லூரிகள் - 13

3. அண்ணா பல்கலை சார்ந்த அரசுக்கல்லூரிகள் - 9

4. அரசு உதவி பெறும் கல்லூரிகள் - 3

5. சுயநிதி கல்லூரிகள் - 537 


கல்வியின் பயன்பாடு: பி.இ., / பி.டெக்., படித்தவர்கள் அடுத்து எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற உயர்கல்வி படிக்கலாம். தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை Board of Apprentice வாயிலாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெறலாம். 

 

அரசு மற்றும் தனியார் துறைகளில் உதவி பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப அலுவலர் போன்ற வேலைவாய்ப்புகளைப் பெறலாம். சுயதொழில் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. வெளி நாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 

மேற்கண்ட விவரங்களை பின் வரும் இணையதளங்களில் பார்த்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

 

அதாவது, இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள், தொழில் பழகுநர் பயிற்சி பெற Board of
Apprenticeship-ன் www.boatsr-apprentice.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்தல் வேண்டும். அதன் முகவரி: Board of Apprenticeship
No. 4th Cross Street, CIT. Campus, Tharamani, Chennai - 13.