Skip to main content

530 பொறியியல் கல்லூரிகள்... 2.63 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை! ஏஐசிடிஇ அனுமதி!!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

tamilnadu engineering colleges aicte

 

நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 530 பொறியியல் கல்லூரிகள் மூலம் 2,63,184 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியுள்ளது.

 

இது மட்டுமின்றி, தமிழகத்தில் புதிதாக 3 இடங்களில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், அக்கல்லூரிகள் மூலம் முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 80 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பி.ஆர்க்., கட்டடக்கலை இளநிலை பட்டப்படிப்பிற்கு, 22 கல்லூரிகளில் 1,520 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2020 - 2021ம் கல்வி ஆண்டில் ஏஐசிடிஇ மூலம் வழங்கப்படும் பி.ஆர்க்., அப்ளைடு ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட், வரைகலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமையல் கலை, மேலாண்மை பட்டப்படிப்புகள், எம்.சி.ஏ., பார்மசி ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியையும் ஏஐசிடிஇ வழங்கியுள்ளது.

 

தமிழகத்தில் அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 496 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவை டிப்ளமோ எனப்படும் பட்டய படிப்புகளை வழங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் மூலம் 1,84,371 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. 

 

எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் 358 கல்வி நிறுவனங்களில் 30,306 இடங்களிலும், எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் 350 கல்வி நிறுவனங்களில் 29,786 இடங்களிலும், எம்.சி.ஏ., பட்டப்படிப்பில் 183 கல்வி நிறுவனங்களில் 10,606 இடங்களிலும் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

 

முதுநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் ஏற்கனவே உள்ள 618 கல்வி நிறுவனங்களில் 71,530 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.