
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மட்டும்தான் மருத்துவப் படிப்புகள் என பரவலாக ஒரு கருத்தாக்கமும் நிலவுகிறது. இந்தியாவில் சித்தம், ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளிலும் சிகிச்சை அளிக்கும் முறைகள் தழைத்தோங்கி இருந்த காலமும் உண்டு என்பதை பலரும் உணர்வதில்லை.
இப்போது நீக்கமற நிறைந்திருக்கும் அலோபதி மருத்துவர்களே கூட பாரம்பரிய சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளை வெளிப்படையாக புறந்தள்ளுவதில்லை. ஆகையால், இந்திய மருத்துவ முறை சார்ந்த தொழில் படிப்புகளுக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் இருப்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
இந்திய மருத்துவப் படிப்புகள்:
1. பிஎஸ்எம்எஸ் (BSMS - Bachelor of Siddha Medicine and Surgery)
2. பிஹெச்எம்எஸ் (BHMS - Bachelor of Homeopathic Medicine and Surgery)
3. பிஏஎம்எஸ் (BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery)
4. பியுஎம்எஸ் (BUMS - Bachelor of Unani Medicine and Surgery)
5. பிஎன்ஒய்எஸ் (BNYS - Bachelor of Naturopathy and Yogic Science)

அடிப்படை கல்வித்தகுதி:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு எப்படி பிளஸ்-2 தான் அடிப்படை கல்வித்தகுதியோ, அதேபோலதான் மேற்கண்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் பிளஸ்-2தான் அடிப்படை கல்வித்தகுதி. 12ம் வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்திருத்தல் அவசியம்.
இதுவும் 5 1/2 ஆண்டு கால படிப்பு ஆகும். இதில்,நான்கரை ஆண்டுகள் வகுப்பிலும், ஓராண்டு காலம் இன்டர்ன்ஷிப் பயிற்சியும் அடங்கும்.
மத்திய அரசின் கீழ் தேசிய ஹோமியோபதி கல்லூரி (கொல்கத்தா) (www.nih.nic.in), தேசிய ஆயுர்வேத கல்லூரி (www.nia.nic.in) (ஜெய்பூர்), இந்திய சுகாதாரக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (www.herci.in) (புது டெல்லி) ஆகிய நான்கு மையங்களில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சேர, அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுதல் அவசியம்.
அதேபோல, தமிழக அரசு நடத்தும் இந்திய மருத்துவக்கல்லூரிகளில் (www.tnhealth.org) சேர்ந்து பயில, மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம்.
தமிழ்நாட்டில் அரசு சித்த மருத்துவக்கல்லூரிகள் - 2, சுயநிதி சித்த மருத்துவக்கல்லூரிகள் - 52), அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி - 1, தனியார் சுயநிதி ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி - 6, அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி - 1, சுயநிதி ஹோமியோபதி மருத்துவக்கல்லூரிகள் - 9, அரசு யுனானி மருத்துவக்கல்லூரி - 1, அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக்கல்லூரி - 1, சுயநிதி யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக்கல்லூரி - 4 உள்ளன.

வேலைவாய்ப்பு:
அரசு மற்றும் தனியார் துறைகளில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்களாக பணியாற்றலாம். மேலும், இத்துறைகளில் முதுநிலை பட்டமேற்படிப்பையும் பயில முடியும். சொந்தமாக மருத்துவமனைகள் நடத்தலாம்.
தமிழக அரசின் இந்திய மருத்துவக்கல்லூரிகள்:
1. அரசு சித்த மருத்துவக்கல்லூரி, அரும்பாக்கம், சென்னை - 600106
2. அரசு சித்த மருத்துவக்கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
3. அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி, திருமங்கலம், மதுரை.
4. அரசு ஆயுர்வேதிக் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, காட்டூர், நாகர்கோவில்.
5. அரசு யுனானி மருத்துவக்கல்லூரி, அரும்பாக்கம், சென்னை - 600106
6. அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி கல்லூரி, அரும்பாக்கம், சென்னை - 600106

கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து வரும் இவ்வேளையில், அலோபதி மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட மாற்று முறை சிகிச்சைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றங்களும் வலியுறுத்தி உள்ளன. இதிலிருந்தே, இந்திய மருத்துவ முறைகளுக்கும் எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை அறியலாம்.
எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைக்காதவர்கள் கடைசியில் வேண்டா வெறுப்பாக பிடிஎஸ் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளில் சேராமல், ஆர்வத்துடன் படித்தால் இத்துறையிலும் தனித்த இடம்பிடிக்க முடியும். மத்திய அரசு, ஆயுஷ் என்ற பெயரில் இந்திய மருத்துவ முறைகளுக்கென தனித்துறையையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.