அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வு ஜுலை 2ம் தேதி துவங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
முன்னதாக ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வு ஜுலை 2ம் தேதி துவங்கும். கடந்த முறை சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் தாமதம் மற்றும் நீட் தேர்வு முடிவுகள் தாமதமானதால் பொறியியல் கலந்தாய்வும் தாமதமாகத் துவங்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. அதேபோல், விரைவில் நீட் தேர்வு முடிவுகளும் வரவிருக்கிறது. அதனால், கலந்தாய்வு ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடைபெறும். அதேபோல், கல்லூரிகளும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே துவங்கும். கலந்தாய்வு முடிந்து செப்.3ம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும்.
பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது இன்னும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து வரும் திங்கட்கிழமை வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிறு (20 மற்றும் 21 ஆகிய தேதிகள்) கல்லூரிகள் இயங்கும்.