ஒரே நேரத்தில் தான் எழுதிய 40 நூல்களை வெளியிட்டு, உலக சாதனை நூலான ’யூனிவர்சல் அச்சீவ்மெண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பிடித்திருப்பவர் முனைவர் மரியதெரசா. இவர் ரங்கசாமி கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பட்டம் பெற்ற மும்மொழிப் புலமை கொண்டவர். அண்மையில் அவரது புலமையைப் பாராட்டி தமிழக அரசு ‘தமிழ் மாமணி’ விருதை வழங்கியிருக்கிறது. அவரை நாம் சந்தித்தபோது...
உங்களைப் பற்றி?
எனக்கு இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளார்கள். என் தாயின் பெயர் பிளான்ஷேத் அம்மையார். தந்தையின் பெயர் ரொபேர் சேழான். எனது தாயார் சிறந்த கவிஞர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது படைப்புகளை எனது சகோதரன் ‘காரைமகள் கவிதைகள்’ எனும் தலைப்பில் தொகுத்திருக்கிறார். காரைமைந்தன் எனும் புனைபெயரில் எனது சகோதரனும் கவிஞராக வலம்வருபவர்.
உங்கள் நூல்களை யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா?
எனது கவிதை நூல்களை இதுவரை பதினெட்டு மாணவர்கள் பி.எச்.டி. மற்றும் எம்.பில் படிப்பிற்கான ஆய்வு நூலாக ஏற்றுக்கொண்டு பட்டம் பெற்றுள்ளனர். இது எனது எழுத்துக்கும், எனக்கும் கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். எனது கவிதைகள், 2017 நவம்பரி 16இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நான்காம் உலகப் பொருளாதார மாநாட்டில், வேந்தன் டா.விஸ்வநாதன் அவர்களால் எனது 10 நூல்கள் வெளியிடப்பட்டதையும் எனது அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
உங்கள் கவிதைகள் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் போய்ச் சேர்ந்திருக்கிறதா?
பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி இளங்கலைப் பாடத்திட்டத்தில் எனது ஹைக்கூ இடம்பெற்றுள்ளது. கேரளாவில் பனிரெண்டாம் வகுப்பு தமிழ் மேனிலை ஆசிரியர் பனுவலில் எனது கவிதை இடம்பெற்றுள்ளது. இவற்றின் மூலம் மாணவர்களிடம் என் எழுத்துக்கள் சேர்ந்துகொண்டிருக்கின்றன.
நீங்கள் வெளியிட்ட முதல் நூல் எது?
நான் 1998 இல் ’நிழல் தேடும் மரங்கள்’ எனும் தலைப்பில் புதுக்கவிதை நூலினை வெளியிட்டேன். அந்த நேரத்தில் எழுத்துலகில் பலர் பல நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து எனக்கும் ஒரு ஆசை வந்தது. அதைத் தொடர்ந்து எனது 40 நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டு சாதனை படைத்தேன். அந்த சாதனையை 100 நூல்களை வெளியிட்டு நானே முறியடிக்கப் போகிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
முதலில் 50 நூல்களை வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். இந்த கொரோனா காலம் எனக்குக் கொடுத்த அவகாசத்தைப் பயன்படுத்தி, நூலின் எண்ணிக்கையை 100 ஆக மாற்றிக்கொண்டேன் அதற்காகக் கடுமையாக உழைத்தேன். இந்த நூறு நூல்களையும் வடிவமைத்து பதிப்பித்து வருகிறார் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் மணிஎழிலன்.
நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி?
கவியருவி, கவிமதி, தமிழருவி, கவிக்குயில், எழுத்து வித்தகர் என கிட்டத்தட்ட நூற்றி முப்பத்தி இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளேன். இவற்றை என் எழுத்துக்கும், உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். சமீபத்தில் எனது எழுத்துப்பணியைப் பாராட்டி தமிழ் வளர்ச்சித்துறையினரால் 2020ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருதைப் பெற்றிருக்கிறேன். அனைவரது பாராட்டும், வாழ்த்துகளும் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வாக உணர்கிறேன்.
இலக்கியத்தின் பல தளத்திலும் எப்படி பயணிக்கிறீர்கள்?
எல்லாவற்றிற்கும் ஆர்வம்தான் காரணம். நான் மரபு, புதுக்கவிதை, சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, லிமரைக்கூ, மோனைக்கூ, எதுகைக்கூ, ஆன்மீகம், மூன்றியோ, நாவல், மொழியாக்கம், சென்ரியு, முரண்கூ, போதனைக்கூ, பழமொன்ரியு, ஹைபுன் என கால்பதித்த தளங்கள் ஏராளம். இவற்றில் பெரும்பாலான வகையில் பெண் கவிஞர்களில் நான் மட்டுமே நூல் வெளியிட்டுள்ளேன்.
தமிழ் இலக்கியத்தில் மோனைக்கூ, எதுகைக்கூ, மூன்றியோ, முரண்கூ, போதனைக்கூ போன்றவைகள் முதன்முதலில் நூல் வடிவமாக பெற்றது எனது எழுத்துக்களில்தான்.
மேலும், ஒரு வரி கவிதைகளில் ‘மனம் நடுவிழா’என்ற நூலும், இருவரியில் குறள்கூ நூலாக ‘நாட்டிய நடவுகள்’ என்ற நூலும், மூன்று வரிகளில் ஹைக்கூ, முரண்கூ, சென்ரியு, போதனைக்கூ, எதுகைக்கூ, மோனைக் கூவில் சில நூல்களும், நான்கு வரிகளில் தன்முனைக் கவிதை நூலும், ஐந்து வரிகளில் குறும்பா நூலும், அறுசீர் விருத்தத்தில் ‘எழுத்துப் பல்லக்கு’ நூலும், எழுசீர் விருத்தத்தில் ‘மொட்டு விட்ட தென்றல்’ நூலும், எண் சீர் விருத்தத்தில் ‘புல்லாங்குழலில் புகுந்த காற்று’, ‘சொற்சுகம்’ போன்ற நூலும், மேலும் ஒரு பொருளுக்கு ஒன்பது வகைமைகளில் கவிதை யாத்து ‘ஒன்பது வாசல்’ என்ற நூலும் எழுதி வெளியிட்டுள்ளேன்.
எந்த நோக்கத்தோடு எழுதுகிறீர்கள்?
சமுதாய அநீதிகளைக் கண்டு மனம் கொதித்துப்போகிறேன். துப்பாக்கி ஏந்தி சமூக விரோதிகளைச் சுட்டு வீழ்த்த இயலாது.
அதனால் என் எழுதுகோலை ஆயுதமாக்குகிறேன். ‘துளிர் விடும் நேரம்’ எனும் தலைப்பில் வர இருக்கும் நூல் முழுக்க முழுக்க இளைய சமுதாயத்திற்கு எழுச்சி ஊட்டுவதாக அமைந்துள்ளது.
நான் இளைய சமுதாயத்தை நம்பியிருக்கிறேன். இந்நேர்காணல் மூலம் கரம் கூப்பி ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். நாளைய சமுதாயத்தில் மனிதர்கள் வாழட்டும்; சாதிகள் ஒழியட்டும். ஊழல்கள் வேரறுக்கப்படட்டும். எல்லோரும் இன்புற்றிருக்க வழி செய்யுங்கள். அன்பால் மனிதனை ஆளுங்கள். மனிதநேயம் எங்கும் ஒளிரட்டும்.
சந்திப்பு: மணி எழிலன்