Skip to main content

பெண்களின் குரல் புரட்சிக்கு அடையாளம்! - கவிஞர் சக்தி நூல் வெளியீட்டு விழாவில் பாரதிதாசன் பேரன் முழக்கம்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

Poet Sakthi released poem book

 

கவிஞர் திருமதி. சக்தியின் ‘விடாது காதல்’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை இக்‌ஷா அரங்கில் இயக்குநர் ராசி. அழகப்பன் தலைமையில் நடந்தது. கவிதாயினிகள் குழலி குமரேசன், லீலா லோகநாதன், மருத்துவர் தேவி பாலு ஆகியோர் நிகழ்சிக்கு முன்னிலை வகித்தனர். நூலைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பேரன் பாரதி, தமிழ் இந்து நாளிதழின் முதன்மைத் துணை ஆசிரியர் மானா. பாஸ்கரன் ஆகியோர் வெளியிட, கவிஞரின் அம்மா ராணி, கவிஞரின் கணவர் சங்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  

 

Poet Sakthi released poem book
                                                       கவிஞர் சக்தி

 

நூலையும் கவிஞரையும் பாராட்டி, சின்னத்திரை நட்சத்திரம் ரேகா, ஆரூர் தமிழ்நாடன், கவிஞர் அசோக்குமார், அமுதா தமிழ்நாடன், கூத்துப்பட்டறை கார்த்திகேயன், தமிழ்ச்சிகரம் முத்துவிஜயன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

 

Poet Sakthi released poem book
                                                                ரேகா

 

கவிஞர் ஷக்தியை வாழ்த்திப் பேசிய சின்னத்திரை நட்சத்திரம் ரேகா, “நான் பிறப்பால் கேரளப்பெண். ஆனால், தமிழின் மீதான ஈர்ப்பால் தமிழ்ப்பெண்ணாக வாழ்கிறேன். தமிழில் தொல்காப்பியத்தை ஆய்வுக்கு எடுத்து, இளம் முனைவர் பட்டம் பெற்றேன். காரணம், தமிழின் இனிமை அப்படி என்னை ஈர்த்திருக்கிறது. அதற்குக் காரணம் சக்தியை போன்றவர்களின் எழுத்து. இன்று பெண்கள் காதலையும் துணிந்து எழுதவந்திருப்பது பெருமிதத்திற்குரியது. கவிஞர் சக்தியைப் பாராட்டுவதற்கு முன்பாக, அவரை எழுதவைத்து அழகு பார்க்கும் அவரது கணவரை வணங்கிப் பாராட்டுகிறேன். பெண்மையை மதிப்பதில்தான் ஆண்மையில் அழகு இருக்கிறது” என்றார் அழுத்தமாக.

 

Poet Sakthi released poem book
                                                                    அமுதா

 

“பெண்கள் காதலைப் பேசக்கூடது என்று ஆண்கள் உலகம் சட்டம் போட்டிருந்தது, அந்த ஆணியத்தின் அழுக்கை, தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் பதிவுசெய்தது. நீங்கள் சட்டங்கள் போடுங்கள். நாங்கள் அதை உடைத்தெறிகிறோம் என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகிரங்கமாக தன் காதலையும் காமத்தையும் பாடி, ஆணுலகை அதிரவைத்தார் ஒளவையார். அந்த வரிசையில் ஆண்டாள் வந்தார். இப்போது சக்தியைப் போன்றவர்கள், அந்தக் குரலை எதிரொலித்துவருகிறார்கள். இது பெண்ணியத்தின் விடுதலைக்கான குரல்” என்றார் ஆரூர் தமிழ்நாடன்.

 

Poet Sakthi released poem book
                                                   பாரதிதாசன் பேரன் பாரதி

 

நூலை வெளியிட்டுப் பேசிய பாரதிதாசன் பேரன் பாரதி, “இன்று எழுத்தாளர்கள் பெருகிவிட்டார்கள். தரமான எழுத்துக்கள் பெருகவில்லை. ஏதோ ஒருவகையில், எழுத்துக்களின் தரம் குறைந்துகொண்டேவருகிறது. ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை இதயத்தால் ஏந்தினார்கள். படைப்புகளுக்கு அவ்வளவு மதிப்பளித்தார்கள். இன்று அப்படி ஒரு போக்கு இல்லை என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. இந்த மேடைக்கு வந்த பிறகு அந்தக் கவலை மறைந்துவிட்டது. சிறந்த படைப்பாளர்கள், உயர்ந்த கவிஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதை இந்த மேடை உணர்த்துகிறது. கவிஞர் சக்தியின் கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன. ‘எங்கெங்கும் காணினும் சக்தியடா...’ என்று  என் தாத்தா புரட்சிக்கவிஞர், கவிஞர் சக்திக்காகவே பாடினாரோ என்று தோன்றுகிறது. பெண்கள் எழுப்பும் புதிய குரல் புரட்சிக்கு அடையாளம்” என்று வாழ்த்தினார்.

 

Poet Sakthi released poem book
                                                           ராசி.அழகப்பன்

 

இயக்குநர் ராசி. அழகப்பன், “காதல் உணர்வு என்பது ஆணுக்கு மட்டுமானது என்று இத்தனை காலம், ஆணுலகம் அதை அனுபவித்துவந்தது. அது பொது உணர்வு, எங்களுக்கும் காதல் உண்டு என்கிற புரட்சிக் குரலை, கவிஞர் சக்தி இங்கே எழுப்பியிருக்கிறார். இது இவரது முதல் நூலைப் போலத் தெரியவில்லை. அவ்வளவு அனுபவ முதிர்ச்சியை அன்பின் அனுபவத்தைக் கவிதைகளாக அரங்கேற்றியிருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

 

Poet Sakthi released poem book
                                               மானா.பாஸ்கரன்

 

சிறப்புரையாற்றிய தமிழ் இந்து முதன்மைத் துணை ஆசிரியர் மானா. பாஸ்கரன், “இது காதல் கவிதைகளின் தொகுப்பு என்பதற்காக இதை யாரும் மலிவாகவோ, அலட்சியமாகவோ கருதக்கூடாது. மிகவும் புனிதமான உணர்வு காதல். அதை நுணுக்கமாகவும் நுட்பமாகவும் கலை நயத்தோடும் எழுதியிருக்கிறார் கவிஞர் சக்தி. தனது கிராமிய அடையாளத்தையும் சுயத்தையும் இழக்காதவர் சக்தி என்பதை இந்த நூல் அடையாளம் காட்டுகிறது. உலகக் கவிஞர்கள் அத்தனை பேரும் காதலைப் பாடியிருக்கிறார்கள். கவிஞர் சக்தி, அதை உளப்பூர்வமாக உணர்ந்து, அதன் உயர்வை அழகாகப் பாடியிருக்கிறார்” என்று வாழ்த்தினார்.

 

நிகழ்ச்சியில் ‘அகம் கூத்துப்பட்டறை’ நிறுவனர் முத்துசாமி, ‘பசுமைக் காவலர்’ வானவன், கவிஞர்கள் கன்னிக்கோயில் ராஜா, கனகா பாலன், பரணி சுப. சேகர், முனைவர் பேச்சியம்மாள், வத்திராயிருப்பு கெளதமன், ராஜ்குமார் சிவன், கவிஞர் ஆபா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அகம் கூத்துப்பட்டறையினர், பெண் கவிஞர்களுக்கு வீரமங்கை விருதளித்து சிறப்பித்தனர். கவிஞர் ஷக்தி, நிறைவாக ஏற்புரையாற்றினார். சென்னையை மழை நனைப்பதற்கு முன்னதாகவே, இலக்கியத்தால் நனைத்துக் குளிரவைத்துவிட்டது. 

 

 

Next Story

தமிழக அரசு சார்பில் கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப்புத்தகம் வழங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
TN Govt to provide textbooks to the Qatar Tamil Society

கத்தார் தமிழர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (13.03.2024) கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார். இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளான லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story

“பாடப் புத்தகத்தில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு” - கர்நாடக அரசு

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
“Biography of Father Periyar in Text Book” - Government of Karnataka

கர்நாடகாவில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு கடந்த 2022 - 2023 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாறு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் பலராம் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த தகவல்களும், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களின் கதை மற்றும் கவிதைகளும் நீக்கப்பட்டன. இந்த செயல் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி 2024 - 2025 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை கர்நாடக காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழிப் பாடங்களில் முற்போக்கு தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 10 ஆம் வகுப்பு வரலாறு பாடத் திட்டத்தில், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சாவித்ரிபாய் பூலே, திப்பு சுல்தான், பசவண்ணர், விஸ்வேவரய்யா ஆகியோரின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளன.