கவிஞர் சாக்லா எழுதிய உயிராடல் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 15 ஆம் நாளன்று வத்தலக்குண்டு அஸ்மா மஹாலில் நடைபெற்றது. ஓவியா பதிப்பகத்தின் மூலம் வெளியான கவிதை நூலை திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி வெளியிட, கவிஞர் சாக்லாவின் தாயார் நூலை பெற்றுக்கொண்டார். கவிஞர் வதிலைபிரபா வரவேற்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து பேராசிரியர் ஹாஜா கனி, வழக்கறிஞர் அப்ரார் அகமது, முனைவர் சக்தி ஜோதி, எம்.யாக்கூப், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் வாழ்த்துரைகளையும், சிறப்புரைகளையும் ஆற்றினார்.
நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியாக, வரலாற்று ஆய்வாளர் தொ. பரமசிவம், கவிஞர் இளவேனில், தோழர் கருப்பு கருணா, பேராசிரியர் ஹாஜா கனி அவர்களின் தந்தையார் எஸ்.என். ஜெய்னுல் ஆபிதீன், மருந்தாளர் வத்தலக்குண்டு முகமது இல்யாஸ் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கவிஞர் யுகபாரதி பேசுகையில், "சாக்லாவின் கவிதைகள் வாழ்க்கையின் புரிதலை தெளிவாக மரணத்தின் புள்ளியிலிருந்து விளங்க வைக்கிறது. ஒவ்வொரு கவிதைக்குப்பின்னும் இருக்கும் ஆழமான அர்த்தத்தை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும்" என்றார். தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஹாஜா கனி, "சாக்லாவின் உயிராடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் மரணத்தின் மறுவிசாரணையாகவே இருக்கிறது. கவிதைகள் அனைத்தும் அவரினுள் ஒளிந்திருக்கும் ஆன்மநேயத்தை வெளிப்படுத்துகின்றன. இது உயிராடல் என்பதைவிட உயிரோடல் என்பதே உண்மை" என்றார்.
"மரணத்தின் வழியில் ஒரு பூ மலர்வதை காணச்சொல்லி வாசகர்களை வேறொரு பாதையில் பயணிக்க வைக்கிறார் சாக்லா" என்று வழக்கறிஞர் அப்ரார் அகமதின் பேச்சு அமைந்தது. ஒவ்வொரு கவிதையின் கருப்பொருள் குறித்தும் மிகச்சிறந்த முறையில் கவிஞர் சக்திஜோதி ஆய்வுரையாற்றினார். யாக்கூப் மற்றும் ஜான்சி ராணி வாழ்த்துரைகளை வழங்கினர். இறுதியாக கவிஞர் சாக்லா ஏற்புரையாற்றினார். நிகழ்வை கார்த்திகா கண்ணன் முன்னின்று தொகுத்து வழங்கினார். துளிர் இலக்கிய அமைப்பின் அமைப்பாளர் யூசுப் அன்சாரி, பட்டிமன்ற பேச்சாளர் சுப. மாரிமுத்து, எழுத்தாளர் ஆல்பட் மேலும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உயிராடல் கவிதை நூல் தற்போது விற்பனைக்காக உள்ளது. வாசகர்கள் உயிராடலுடன் உறவாடுங்கள். தொடர்பு எண் : 96298 18810