ஒருநாடு மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும், அந்த நாட்டு மக்களை அடிமையாக்க வேண்டும் என்றால் அவனின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழியை அழிக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இதனைத்தான் உலகளவில் பல ஆதிக்க மக்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்கிறார்கள்.
ஒருக்காலத்தில் உலகத்தில் பேசப்பட்ட மொழி எண்ணிக்கைக்கும் இன்று பேசப்படும் மொழி எண்ணிக்கைக்கும் மலைக்கும் – மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. இன்று 7 ஆயிரம் மொழிகள் உலகளவில் பேசப்படுகின்றன. அதில் 500 மொழிகள் தான் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கில் இருக்கும் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள்.
மொழியை அழிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க மக்கள் தன் மொழியே சிறந்தமொழியென, அதிகாரத்தை கொண்டு சிறுபான்மை மக்கள் பேசும் மொழியை அழிப்பதே காரணம். அதோடு, பெரும் நிறுவனங்கள் உன்னையும், என்னையும் இணைக்க ஒரு பொதுமொழி வேண்டும் அதனால் உன் மொழியை விடு என அழுத்தம் தருவதால் அவர்களிடம் வேலை செய்பவர்கள் தங்களது தாய்மொழியை மறக்கின்றனர். தாய்மொழியில் படித்தால் வேலை கிடைக்காது என்கிற தவறான புரிதல் தாய்மொழியை மறக்கடிக்க வைக்கின்றனர்.
இந்தியாவில் இன்று நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்பட்டாலும், ஆட்சிமொழியாக 18 மொழிகளே உள்ளன. இந்த 18 மொழிகள் மற்ற மொழிகளை அழிக்கின்றன என்பதே உண்மை. இந்த 18 மொழிகளில் என் மொழியே உயர்ந்த மொழி என்கிறது இந்தி பேசுபவர்கள். மையத்தில் அவர்கள் அதிகாரத்தில் உள்ளதால் இந்தியாவின் ஒற்றை மொழிக்கொள்கையை கொண்டு வர சுமார் 100 ஆண்டுகளாக முயற்சி செய்துவருகிறார்கள். அதனை எதிர்த்து நின்று களம்மாடுவது சில மொழிகள் தான் அதில் முதன்மை மொழி. திராவிட மொழிகளின் முதல் மொழியான தமிழ்மொழி தான்.
தாய்மொழிக்காக போராடி உயிர் நீத்த நூற்றுக்கணக்கானவர்களை கொண்ட மக்கள் யார் என்றால் அது தமிழர்கள் தான். உலகத்தில் வேறு எந்த மொழியினருக்கும் அப்படியொரு சிறப்பு கிடையாது. அதேப்போல் தனது மொழியையே பெயராக கொண்டவர்கள் தமிழர்கள் தமிழ், தமிழ்செல்வன், தமிழ்க்குமரன், தமிழன்பன்பன், தமிழ்செல்வி, தமிழரசி என நூற்றுக்கணக்கில் தமிழ் பெயர்கள் உள்ளன. அப்படிப்பட்ட மொழியை அழிக்க துடிக்கிறது ஆரியக்கூட்டம். தமிழ்மொழியை விட செத்த மொழியான சமஸ்கிருதம் பழமையான மொழி என்கிறது.
அதோடு, இந்தியா முழுமைக்கும் ஒரு மொழியை திணிக்க சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல் இன்றைய பிரதமர்கள் வரை முயல்கிறார்கள். இதனை எதிர்த்து அன்று முதல் இன்று வரை இப்போதும் தொடர்ச்சியாக போராடுவது தமிழர்கள் தான். மொழி திணிப்பை எந்த வகையில் வந்தாலும் அதனை எதிர்த்து உதைத்து துரத்திக்கொண்டு இருக்கிறார்கள் தமிழர்கள். ஆனால், அவர்களால் பெரிய அளவில் வரலாற்றில் இடம்பெற முடியவில்லை.
பாகிஸ்தான் உருவானபின், உருதுவே ஆட்சிமொழி என்கிற சட்டத்தை அமுல்படுத்தியது. இதனை பாகிஸ்தான் நாட்டில் கிழக்கு பகுதியில் வாழ்ந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் எங்களது வங்கமொழியையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடினார்கள். 1952ல் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். வங்கமொழியை அரசு மொழியாக அறிவிக்க வேண்டுமென மாணவ சமுதாயமும் போராட்ட களத்தில் குதித்தது. இந்த போராட்டங்களை பாகிஸ்தான் அரசாங்கம் காவல்துறையை கொண்டு அடக்கியது. அந்த அடக்கு முறையின்போது டாக்கா பல்கலைகழக மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 மாணவர்கள் இறந்தனர். இது சர்வதேச ரீதியில் பெரும் கண்டனத்தை எழுப்பியது.
கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என்கிற பெயரில் ஒரு நாடாக உருவாக இதுவும் ஒரு காரணம். வங்கதேசம் உருவானபின் இறந்த 4 மாணவர்களின் மரணத்தை வரலாற்று நிகழ்வாக மாற்றி அவர்களின் தியாகத்தை அனுசரித்தது. தாய்மொழிக்காக உயிர் துறந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையில் இதுப்பற்றி பேசி, ஆவணங்களை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக 1999ல் உலக தாய்மொழி தினம் உருவாக்கப்பட்டபோது, அந்த இளைஞர்களின் நினைவாக அவர்கள் கொல்லப்பட்ட பிப்ரவரி 21ந்தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சாரம், பண்பாடு, கல்வி அமைப்பான யுனஸ்கோ. 2000 ஆமே் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தாய்மொழி தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.