Skip to main content

அமுதா தமிழ்நாடனின் ‘நிலாக் கூடை’ கவிதை நூல்! -ஆன்லைனில் வெளிட்ட பிரபலங்கள்!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

கவிஞர் திருமதி. அமுதா தமிழ்நாடன் ‘நிலாக்கூடை என்ற கவிதை நூலைப் படைத்திருக்கிறார். வண்ணமயமாக  பொலிவுடன் உருவாக்கப்பட்ட  இந்த நூல் தமிழ் கூறு நல்லுலகின் பார்வைக்காக அமேசான் கிண்டிலில் ஏற்றப்பட்டிருக்கிறது.

 

பெண்ணுரிமை, கிராமியம், கிராமிய மக்களின் அன்புசூழ் வாழ்க்கை, ஏழ்மை, குடியின் கொடுமை, கரோனா நெருக்கடி, குடும்ப உறவுகளின் மேன்மை என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தக் கவிதை தொகுப்பை, ஆன்லைனில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகள் அரங்கேறின.

 

முன்னதாக நிலாக்கூடை நூலின் முதற்படியை, கவிஞரின் சொந்த ஊரான நாகை மாவட்ட திருவாய்மூரில், கவிஞரின் தாயார் சின்னம்மாள் உவகையோடு வெளியிட, அதைக் கவிஞரின் சகோதரி சுபாஷினி ராமதாஸ் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.


அமுதா தமிழ்நாடனின் நிலாக் கூடைத் தொகுப்பை, இயக்குநரும் நடிகருமான யார் கண்ணன் சென்னையில் வெளியிட்டு அறிமுகம் செய்ய, அதை அவர் மகளும் உதவி இயக்குநருமான மீரா திரிபுரசுந்தரி மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.  

 

அதேபோல் பிரபல நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரியின் தாயார் திருமதி அமலோற்பவம் அம்மாள் தேனியில் நிலாக்கூடை நூலை வாழ்த்தி மகிழ்ந்து வெளியிட, அதை நடிகர் ஜோ மல்லூரி பெற்றுக்கொண்டார்.

 

அதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரும், நெறியாளரும், எழுத்தாளருமான பத்மா நிலாக் கூடையை உற்சாகமாய் வெளியிட, அவர் கணவரும் திரைப்படப் பாடலாசிரியருமான அருண்பாரதி மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்.  


குடும்ப உறவுகளைக் கொண்டாடும் நிலாக்கூடையைத் திரைப்பிரபலங்கள் குடும்ப சகிதமாக வெளியிட்டு சிறப்பித்தது, கூடுதல் சிறப்பாகும்.


இதேபோல் இலக்கிய உலகின் சார்பில், மதுரையில்  நிலாக்கூடை நூலை, ’பொற்கைப்பாண்டியன் கவிதா மண்டலத் தலைவர்’ பாவலர் பொற்கைப்பாண்டியன் வெளியிட்டு மகிழ்வுடன் அறிமுகம் செய்ய, அதனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்குநரின் நேர்முக செயலாளரும் ’மகிழ்ச்சி’ இதழின் ஆசிரியருமான சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.


மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், கவிஞரும் அரசியல் பிரபலமுமான திருமதி கவிசெல்வா, நிலாக்கூடையை உள்ளார்ந்த வாழ்த்துக்களோடு வெளியிட, அதை அவரது மகன் பரமாத்மிகன் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார். நிலாக்கூடை நூல் குறித்துத் தம் மன்முவந்த வாழ்த்தைத் தெரிவித்த பாவலர் பொற்கைப்பாண்டியன்....


”கவிதாயினி அமுதா தமிழ்நாடனின் நிலாக்கூடை, தமிழ்கூறும் நல்லுலகால் பேசப்படும் நூல். ஒரு ஓவியக் கூடத்தையே முதுகில் சுமந்து பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சியாய் நான் நூலுக்குள் நுழைந்து பறந்து திரிந்தேன். எல்லாக் கவிதைகளிலும் உயிர் உலாவுகிறது. அப்பாவின் முத்தமாய்ச் சில கவிதைகளில் மனசு தொலைந்துபோனது. எட்டுக்குடித் திருவிழாவில் தொலைந்து போன கால் கொலுசாய்.. கருக்காய், கருக்கரிவாள் போன்ற கிராமத்துச் சொல்லாடல்களில் வயலில் இறங்கி உழவு செய்த காலமும், கதிர் அறுத்த காலமும், ஆடுமேய்த்த காலமும் உணர்ந்து அனுபவித்தேன்.


நமக்கான வாழ்க்கையை வாழாத ஏக்கத்திலும் ஞாயிற்றுக்கிழமைத் தவிப்பிலும் மனம் குலைந்தேன். நண்பர்களும் உறவினர்களும் வராத இல்லம் செங்கல் சூளை என்ற சொல்லாடல் தூங்கவிட வில்லை. அம்மாவின் சேலையைக் கிழித்து தாவணி கட்டிய நினைவுகளாய்க் கவிதைகள் மணக்கின்றன. அன்புத் தங்கை அமுதா தமிழ்நாடனைத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொண்டு கொண்டாடும். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்” என்று தன் வாழ்த்தைத் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp


ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட முதல் தமிழ்க்கவிதை நூல் என்ற பெருமையையும், ஒரே நேரத்தில் பல ஊர்களில் அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட நூல் என்ற பெருமையையும் அமுதா தமிழ்நாடனின் ’நிலாக்கூடை’ பெற்றிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியிடம் ஆன்லைனில் ரூ.6.5 லட்சம் மோசடி!

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
Rs 6.5 lakh online fraud on wife of BSNL employee

திருச்சி மேலப்புதூர் ட்ரெங்க்பார் பகுதியைச் சேர்ந்தவர் காரல் கஸ்பரோ பிரவீன். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டெரி சிந்தியா பிரிசில் (30). இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பகுதி நேர வேலை என்ற ஒரு பக்கம் வந்தது.

பின்னர் அதன் மூலமாக மர்ம நபர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தனது பெயரைப் பதிவு செய்து அந்த மோசடி நபர் கூறிய நிறுவனத்தில் ரூபாய் 20,252 முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூபாய் 25 ஆயிரத்து 48 வந்து சேர்ந்தது. இதைத்தொடர்ந்து கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கருதிய அவர் பல்வேறு தவணைகள் மூலமாக ரூபாய் 6 லட்சத்து 56 ஆயிரத்து 467 முதலீடு செய்தார். அதன் பின்னர் பல நாட்கள் கடந்தும் அவருக்கு லாபத் தொகை வரவில்லை.

இதனைத் தொடர்ந்து, அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சிந்தியா திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்கு பதிவு செய்து பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியிடம் மோசடி செய்த அந்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகிறார்.

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.