படித்தவர்களோ, படிக்காதவர்களோ- வாழ்க்கையை நடத்த சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. உத்தியோகம் செய்து பிழைப்பவர் பலர் என்றாலும், சிலருக்கு மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்வதோ, அடுத்தவர் தம்மை அதிகாரம் செய்வதோ பிடிக்காது என்பதால், சுயமாகத் தொழில் தொடங்கி சம்பாதிக்கிறார்கள். சிலர் அதில் நம்பிக்கைக்கு உரியவர்களை சேர்த்துக்கொண்டு கூட்டுத்தொழில் செய்கிறார்கள். நண்பர்கள் அல்லது மனைவி, உற்றார்- உறவினர்கள் ஆகியோருடன் தங்களால் இயன்ற அளவில் முதலீடுகளைப் போட்டு, ஏதாவது ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் படிப்படியாக முன்னேற்றமடையும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.
இப்படி கூட்டுத்தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் ஜோதிடரீதியாக யாருக்கு அமைகிறது என பார்த்தால், ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவம் தொழில் ஸ்தானமாகும். 10-க்கு 10-ஆம் இடமான 7-ஆம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத்தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7-ஆம் அதிபதி 10-ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம்பெற்று அமைந்தாலும், 10-ஆம் அதிபதி 7-ல் அமையப்பெற்றாலும் 7, 10-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத்தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். 10-ஆம் வீட்டைவிட 7-ஆம் வீடு பலம்பெறுமேயானால் கூட்டுத்தொழில் சிறப்பாக அமையும்.
ஒருவருக்கு கூட்டுத்தொழில்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தாலும் யாருடன் சேர்ந்து தொழில் செய்தால் லாபம் சிறப்பாக இருக்கும் என பார்க்கும்போது, ஒரு ஆணின் ஜாதகத்தில் 7, 10-க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால், திருமணத்திற்குப்பின் மனைவியுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஜாதகர் கற்ற கல்வியையே மனைவியும் கற்றிருந்தால் அந்தத் துறையில் இருவரும் சேர்ந்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். அதன்மூலம் லாபங்கள் ஏற்படும்.
7-ஆம் இடம் கூட்டுத்தொழில் ஸ்தானம் என்பதால், 7-ஆம் அதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்து பகை பெற்றோ, நீசம் பெற்றோ, பாதக ஸ்தானத்தில் இருக்குமேயானால், அவர் எந்தவொரு தொழிலையும் கூட்டுசேர்ந்து செய்வதைத் தவிர்த்து, தனித்துச் செயல்படுவதே மிகவும் நல்லது. 7-ஆம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபர் பார்வை மற்றும் நட்பு கிரகச் சேர்க்கையுடன் இருந்தால் கூட்டுத்தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டு. தொழில் ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 10-ஆம் அதிபதியுடன் இணையும் பலம்பெற்ற கிரகங்களின் காரகத்துவத்திற்கு ஏற்ற நபர்கள், தொழில்ரீதியாக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பார்கள்.
அதுபோல, 3, 11-க்கு அதிபதிகள் 10-ஆம் அதிபதியுடன் சேர்ந்து செவ்வாய் பலம் பெற்றிருந்தால், உடன்பிறந்த சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், சந்திரன் பலம் பெற்றிருந்தால் சகோதரி அல்லது உறவுப் பெண்கள், தோழிகள் போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யும் வாய்ப்பு, சகோதரியைச் சார்ந்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு.
ஒருவர் என்னதான் கல்வி கற்றிருந்தாலும், அவர் ஜாதகத்தில் 5, 9-ஆம் அதிபதிகள் பலம்பெற்று 10-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்து, 5, 9-ஆம் வீடுகளில் பாவ கிரகங்கள் எதுவும் அமையாமல் இருந்து, தந்தைகாரகன் சூரியனும் பலமாக அமைந்து, சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையாமல் இருந்தால் தந்தை செய்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்து செய்யக்கூடிய அமைப்பு, தந்தைவழி மூதாதையர்கள் செய்த தொழிலைச் செய்யும் வாய்ப்பு, தந்தைவழி உறவுகளுடன் சேர்ந்து தொழில்செய்யும் அமைப்பு உண்டாகும்.
10-ஆம் அதிபதியுடன் 4-ஆம் அதிபதியும் சந்திரன், புதன் போன்ற கிரகங்களும் சேர்க்கைப் பெற்றிருந்தால் தாய்வழி உறவுகள் மற்றும் தாய்மாமனுடன் சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். 10-ஆம் அதிபதியுடன் 2-ஆம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது உறவினர்களுடன் கூட்டுத்தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். 10-ஆம் அதிபதியுடன் குரு, புதன் இணைந்து பலம்பெற்று வலுவாக அமைந்திருந்தால், நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி பலம்பெற்று அமைந்து சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் அவருக்கு திறமையான வேலையாட்கள் கிடைக்கப்பெறுவதுடன், வேலையாட்களிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்து அதன்மூலம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி 5-ஆம் அதிபதியின் சேர்க்கைப்பெற்று, புத்திரகாகரன் குரு பகவானும் பலம் பெற்றிருந்தால் தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் உதவியுடன் தொழிலில் பல சாதனைகள் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய ஜனன ஜாதகத்தை நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஒருவரது ஜாதகத்தை ஆராயும்போது ஏதாவது ஒரு ஸ்தானம் பலமாக இருந்தால் அந்த ஸ்தானத்தின் காரகத்துவத்திற்கு ஏற்ற நபர் ஜாதகருக்கு கடைசிவரை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். அப்படி எந்த ஸ்தானம், கிரகம் பலம்பெற்று அமைந்திருக்கிறதோ, அந்த ஸ்தானம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரைக் கூட்டாகச் சேர்த்து தொழில் செய்யும்போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத்தொழில் செய்வதைத் தவிர்த்து எதிலும் தனித்து செயல்படுவது நல்லது. அப்படியே செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுமேயானால் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கூட்டாகச் சேர்த்துக்கொள்வது நல்லது.