ஆலயங்கள் அனைத்திலும் தினசரி பூஜைகளுக்கு மூலவர் சிலையும், திருவிழா காலங்களில் வீதி உலாவிற்கு உர்ச்சவர் சிலையும் இருக்கும். ஆனால் மூலவர், உர்ச்சவர் சிலையே இல்லாமல் கருவறையின் கதவுகளையே கடவுளாக வழிபட்டு வருகின்றனர். அந்த அபூர்வ கோயிலுக்கு ஆச்சர்யம் ஊட்டும் கதைகளும் உள்ளன. மலைகளும் காடுகளும் நிறைந்த தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தேவதானபட்டி கிராமம். இக்கிராமத்தில் மழைக்காற்று இதமாக வீச மஞ்சலாற்று கரையில் அமர்ந்துள்ளது மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் வஜ்ஜிரதந்தன் என்கின்ற அசுரனை கொண்ற அம்மன் அங்கேயே தவம் இருகின்றது என்றும், காற்றாற்று வெள்ளத்தில் மிதந்து வந்து அதிசயங்கள் பல புரிந்தது என்றும் அக்கிராம மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

அம்மன் ஆற்றில் மூங்கில் பெட்டியில் மிதந்து வரும் வேளையில் மூங்கிலை கொண்டு அணைக்கட்டி அந்த அம்மனை கரைசேர்த்ததாகவும் கூறுகின்றனர். பூட்டிய கதவோடு குச்சி வீட்டில் தான் அம்மன் குடி இருக்கிறாள். பக்தர்களுக்கு ஜோதிவடிவில் அருள்தரும் மூங்கிலணை காமாட்சியம்மன் மாவட்டம் முழுவதும் பெருமை சூட்டும் விதமாக அமைந்துள்ளன. கருவரையின் கதவுகளுக்கு (கடவுளாக வழிபடும் கதவுக்கு) இருபுறங்களிலும் அனையாத ஜோதி உள்ளது. அந்த ஜோதியையும், கதவையுமே கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இக்கருவறை மன்னாடியார் கோபத்தின் காரணமாக இக்கருவறை பூட்டப்பட்டது. அக்கதவின் முன்பு நாகப்பீடம் அமைத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். காஞ்சிகாமாட்சியம்மன் கோவிலில் இருப்பது போல் பூஜை மண்டபத்தில் பல்லியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளன.

உடைக்காத தேங்காய், உரிக்காத வாழைப்பழம் மட்டுமே அம்மனுக்கான பூஜை பொருட்கள். அம்மனைச் சுற்றிலும் இல்லறத்தார்கள் வசிக்கக் கூடாது, கோழி கூவும் சத்தம் கேட்க்கக்கூடாது, உரல் உலக்கை இடிக்கக்கூடாது என்ற சத்தியத்தின் அடிப்படையில் தேவதானபட்டியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அம்மன் குடியிருக்கும் வீட்டை யாரும் பார்க்க முடியாது. அம்மன் இரவு கணவில் வந்து சொன்ன பிறகே பிரித்து கூரையை(குச்சி) மேயப்படுகின்றது. முறையாக விரதம் இருந்த இராஜகம்பளத்து நாயக்கர்கள் கண்களை கட்டிக்கொண்டு காமாட்சி புல்லைக் கொண்டு புதியக் கூரை அமைக்க வேண்டும் என்ற ஒரு பாரம்பரிய கட்டுப்பாட்டையும் வகுக்கின்றனர். அம்மன்-வச்சிரதந்தனை வதம் செய்தல் மற்றும் உருவான வரலாறு.

முன்னொரு காலத்தில் காஞ்சனா ஆரண்யப் பகுதியான வங்கீசபுரி நகரத்தை சூலபாணி என்ற அசுரன் மன்னனாக ஆட்சி செய்து வந்தான். சூலபாணி மன்னன் ஒரு சிவ பக்தன். வெகுகாலமாகக் குழந்தைப் பேறின்றி சிவனை வணங்கித் தவம் புரிந்தான். அவனுக்கு வச்சிரதந்தன் என்ற மகன் பிறந்தான். சூலபாணி மன்னன் நோய் வாய்ப்பட்டு இறந்தபின் அவனது மகன் வச்சிரதந்தன் மன்னனான். வச்சிரதந்தன் ஒரு கொடுங்கோலனாகி மக்களையும், மற்றவரையும் கொடுமைப்படுத்தினான்.

வச்சிரதந்தனால் கொடுமைப்படுத்தப்பட்ட தேவர்களும் முனிவர்களும் பிரம்மனிடம் சென்று முறையிட்டார்கள். பிரம்மன் இந்திரனை அழைத்து அசுரன் வச்சிரதந்தனை அழித்துர அனுப்பிவைத்தார்.வச்சிரதந்தன் தேவேந்திரனுடன் போர் தொடுக்கச் செல்லும் முன், அவன் பட்டத்துராணி கோட்டைக்குள் கூகையும் ஆந்தையும் கூவுவதாக தீக்கனாக் கண்டதாக கூறி போருக்குப் போகவேண்டாமென மன்னனிடம் கூறுகிறான். தேவேந்திரன் வச்சிரதந்தனோடு போர் தொடுத்தான். வச்சிரதந்தனின் தளபதி துட்டபத்தி தேவேந்திரனின் வஜ்ஜிராயுதப் படையைத் தோற்கடித்து அவனது வெள்ளை யானையையும் பறித்துக்கொண்டு விரட்டினான். தோல்வியடைந்த இந்திரனும், முனிவர்களும் காஞ்சிபரத்தில் காமாட்சி வடிவில் கோவில் கொண்டுள்ள அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டார்கள்.

காமாட்சி, துர்க்கையை அழைத்து வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தாள். துர்க்கை, அசுரன் வச்சிரதந்தனுடன் போர் செய்தாள்.அசுரன் துர்க்கையை எதிர்த்து கடுமையாக போரிட்டான். வச்சிரதந்தனின் தலையைத் துர்க்கை வெட்டி வீழ்த்தினாள். வச்சிரதந்தன் தலை வெட்டுண்டு வீழ்ந்த போதும், தன்னுடைய மாய சக்தியினால் புலியாக, சிங்கமாக, பல்வேறு மிருகங்களின் வடிவில் மீண்டும் உயகர்த்தெழுந்து போரிட்டான்.இறுதியில் காமாட்சி தேவியே களத்தில் இறங்கி, அசுரனின் தலையைக் கொய்து அவன் மீண்டும் உயிர்பெறாத வண்ணம், தலையை மிதித்து நசுக்கினாள். அசுரனின் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறியது. இறுதியில் அசுரனை அழித்து வதம் செய்தாள் காமாட்சி. அசுரன் வச்சிரதந்தனின் மனைவியர் அவனுடன் உடன்கட்டையேறி உயிர் நீத்தனர் என்று வரலாறு பேசப்படுகின்றது.
கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்தில் உள்ளவர்கள் இருக்க வேண்டாம். உரல் சத்தம் , உலக்கைச் சத்தம் கேட்காத தொலைவில் குடியிருந்து என்னை வணங்கி வாருங்கள். நெய் விளக்கைத் தவிர எனக்கு வேறு விளக்கு வேண்டாம். தேங்காய் பழம் நிவேத்தியம் போதும். எனக்கு அன்ன நிவேத்தியம் வேண்டாம் என்று அம்மன் கூறினாள் என்ற வரலாறும் உண்டு. மஞ்சளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது அன்னை காமாட்சி குழந்தை வடிவத்தில் ஒரு மூங்கில் பெட்டியில் மிதந்துவர, அதனை மூங்கில் புதரொன்று தடுத்து நிறுத்திய இடத்தில் தெய்வமாக காமாட்சி எழுந்தருளிய இவ்விடத்திலேயே கோவில் கட்டப்பட்டது.
மூங்கில் அணை கட்டி நின்றதால் அன்று முதல் இத்தெய்வம் "மூங்கிலணைக் காமாட்சியம்மன்" எனப் பெயரிட்டு வழங்கப்பட்டது. காமாட்சியம்மனை மூங்கில் புதரருகே கண்டபோது மெய்மறந்து, பக்திப்பரவசத்தில் தேங்காயை உடைக்காமலும், வாழைப்பழத்தை உரிக்காமலும் பூஜை செய்துவிட்டனர் பிறகு அத்தவறை உணர்ந்த மக்கள் , ஈனாத பசுவின் மடியில் பால் அருந்திய அன்னையின் விருப்பம் இதுவாகும் என்று, அன்று முதல் உடைக்காத தேங்காயையும், உர்க்காத வாழைப்பழத்தையுமே இவ்வாலத்தில் வைத்து வணங்கி வருகின்றனர். அசுரனை வதைத்தபின், பாவம் தீர்க்க, காமாட்சி தவமிருந்த மலைப்பகுதியில், காமாட்சியம்மனுக்குத் தனியாக ஒரு சிறு கோவில் இருக்கிறது. மலையின் மேல் பகுதியில் இருப்பதால் இக்கோவில் அம்மா மெச்சு என்றழைக்கப்படுகிறது. இது தேவதானபட்டியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தலையாறு நீர்வீழ்ச்சியின் அருகிலுள்ளது.
ஆலயத்தின் சிறப்புகள்:
1) அம்மனுக்கு விக்கிரகங்கள் கிடையாது. குச்சிவீட்டின் கதவுக்கு மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
2) தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதில்லை.
3) குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
4) இக்கோயிலில் கோபுரங்கள் எதுவும் கிடையாது. கொடிமரம், பலிபீடம் எதுவும் கிடையாது.
இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தால் இயங்கி வருகிறது. ஒரு பரம்பரை அறங்காவலரும், இரண்டு பரம்பரையில்லாத அறங்காவலர்களும் அடங்கிய குழுவும் இருக்க வேண்டும் எனவும், பரம்பரை அறங்காவலர்களாக திரு. என்.வி.கனகராஜ் பாண்டியனும், திரு.என்.வி.தனராஜ் பாண்டியனும் இருவரில் ஒருவர் சுழற்ச்சி முறையில் மாறிமாறி இருக்க வேண்டும் என்று மதுரை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை ) எச்.ஏ.73/1978 இல் நிர்வாகத் திட்டத்தின்படி இத்திருக்கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார் வி.கனகராஜ் பாண்டியன் அவர்கள்.
பா.விக்னேஷ் பெருமாள்.