2020 ஏப்ரல் 14 அன்று தமிழ் வருடமான சார்வரி வருடம் தொடங்கியது. இந்த சார்வரி வருட பாடல்:-
சார்வரி ஆண்ட தனிற் சாதி பதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றிச் சாவார் இயம்பு.
என இவ்வருடத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தின் தன்மையைப் பற்றி இவ்வளவு மோசமாக கூறியிருக்கிறார்கள் எனில் அதில் விஷயம் இருக்கத்தான் வேண்டும்.
இந்த சார்வரி வருடம் முழுவதும் உள்ள கோட்சார நிலை சற்றே திகிலடையச் செய்கிறது.
சார்வரி வருடம் 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் வரை இருக்கும்.
முக்கியமான கோட்சார நிகழ்வுகளை காண்போம்.
1. 2020 மே 4ஆம் தேதி செவ்வாய் கும்ப ராசிக்கு மாறுவார். இதன் மூலம், செவ்வாய், சனி, குரு என மூன்று கிரக சேர்க்கையிலிருந்து, செவ்வாய் நகர்ந்து விடுவார்.
மேலும் செவ்வாய் சூரியனை பார்க்கும் பார்வையும் விலகிவிடும். இப்போது சூரியன், குரு, சனி என மூன்று கிரகமும் ஹேப்பி அண்ணாச்சிதான். இந்த செவ்வாய் நகர்வு உலகத்தை லேசாக மூச்சுவிட செய்யும். உலக ஆரோக்கியத்தில் சிறு கீற்று ஒளிரும்.
2. ஜுன் 21 அன்று சூரிய கிரகணம் நடக்கிறது. அன்று சூரியன், சந்திரன், ராகு என மூன்று கிரகங்களும் மிருக சீரிட நட்சத்திரத்தில் ஒன்று கூடி நிற்கிறார்கள். மிருக சீரிடம் என்பது செவ்வாய் சார நட்சத்திரம். செவ்வாய் இந்த நேரத்தில் மீன ராசியில் அமர்ந்துள்ளார். அவர் தனது நான்காம் பார்வையால் சூரியன், சந்திரன், ராகுவை பார்க்கிறார். இவர்களுடன் வக்கிர புதனும் உள்ளார். இது ஒரு மோசமான அமைப்பு.
3. ஆனி மாதம் அதாவது ஜூன் 18 முதல் ஜூலை 16 வரை செவ்வாய் பார்வையின் சூரியனும் ராகுவும் இருப்பர். கேதுவும் சூரியன், ராகுவை பார்வையிடுவார். இதன் மூலம் செவ்வாய், சூரியன், ராகு, கேது எனும் பாவிகள் சேர்க்கை இருப்பதாக ஆகிறது. இது கெடுதல் செய்யும் அமைப்பு. இவர்களை ஒரு சுப கிரகமும் பார்க்கவில்லை.
4. ஜூலை 16 அன்று சூரியன் காலசர்ப தோஷத்திலிருந்து விலகி, கடகத்திற்கு மாறிவிடுவார். இதனால் உலகம் சற்றே முன்னேற்றம் அடையத் தொடங்கும்.
5. அடுத்து குரு, ராகு, கேது பெயர்ச்சி நடக்கும். வாக்கியப்படி, செட்பம்பர் 1ந் தேதி, திருக்கணிதப்படி செப்டம்பர் 25 அன்று ராகு ரிஷபத்துக்கும், கேது விருச்சிகத்துக்கும் மாறுவர்.
6. டிசம்பர் 24 அன்று செவ்வாய், மேச ராசிக்கு செல்வார். அங்கிருந்து தனது எட்டாம் பார்வையால், கேதுவை நோக்குவார். ஆக செவ்வாய், கேது சம்பந்தம் உண்டாகிறது. இவ்விளைவு நன்மை தராது.
7. 2021ம் வருடம் ஜனவரி 4ஆம் தேதி மறுபடியும் ராகு, கேதுகளுக்குள் மற்ற அனைத்து கிரகமும் அடைப்பட்டுக்கொள்ளும். இரண்டாவதாக ஒரு கால ஸர்ப தோஷம் உண்டாகும்.
8. 2021 பிப்ரவரி 22ந் தேதி செவ்வாய், ரிஷப ராசிக்கு மாறி, அங்குள்ள ராகுவுடன் கை கோர்த்துக் கொள்வார். செவ்வாய், ராகு இணைவு மோசமான கோட்சார நிலை ஆகும்.
9. 2021 சித்திரை மாதம், பிலவ வருட 1ந் தேதி அன்று செவ்வாய், ராகுவைவிட்டு நீங்கி, மிதுனத்தில் நுழைவார்.
ஆக இந்த சார்வரி வருடம் முழுவதுமே, கோட்சாரம் பூச்சாண்டியாக பயமுறுத்துகிறது. எப்போது என்னாகுமோ என்று நடுக்கமாக இருக்கிறது.
ஆக 2021 ஏப்ரல் 14 வரை, ஒரு நன்மையான செயல்களும் நடக்க வாய்ப்பில்லை.
இந்த சார்வரி வருடத்தில் வருஷாதி கிரங்கள் குருவும், சனியும், ராகு கேதுவுக்குள் உள்ளனர். மேலும், ராகு கேதுக்களுடன் செவ்வாய் தொடர்பும் அதிகமாக உள்ளது.
எனவே சார்வரி வருடத்தில் ஜாக்ரதையாக இருக்கவும்.
சரி, இதற்கு பரிகாரம்தான் என்ன?
காளியை வணங்குவதே ஒரே பரிகாரம். மேலும் சில காளிகளுக்கு ஆடு, கோழி போன்ற பலி கொடுப்பதும் நிவர்த்தி தரும் பரிகாரம் ஆகும். அப்புறம் உங்களுக்கு தெரிந்த தெய்வம், தெரியாத சாமி, பக்கத்து ஊர் பகவான், எதிர் தெரு அம்மன், அறிந்த தெய்வம், அறியாத கடவுள் என எல்லா தெய்வத்தையும் விழுந்து விழுந்து வணங்குங்கள். செய்த பாவம் தீர வேறு வழி?
-ஆர். மகாலட்சுமி