விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து லட்சக்கணக்கில் கூடுவார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதுபோல், ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அமாவாசை அன்று இரவு முழுவதும் பகல் போல மக்கள் நடமாட்டம் ஒளி வெளிச்சம் எங்கும் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட அங்காளம்மன் கோவில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. கரோனா நோய் பரவல் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி கோயிலுக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. இதனால், ஊஞ்சல் உற்சவ விழாவும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அங்காளம்மன் கோயிலில் வரும் 4ஆம் தேதி அமாவாசை அன்று பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்துள்ளனர். அதேசமயம், அமாவாசை நாளன்று அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் மட்டும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளனர்.