மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் வரலாறு குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
சமயமும் தமிழும் என்ற தலைப்பில் சிந்திப்பதற்கும் சிந்தித்ததை பகிர்ந்து கொள்வதற்கும் ஏராளமான செய்திகள் உள்ளன. அரிச்சிராப்பகல் திருச்சிராப்பள்ளி என்று திருச்சிராப்பள்ளியை சமயக்குறவர்கள் ஆராதித்து மகிழ்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்றாலே உச்சிப்பிள்ளையார் கோவில்தான் பல பேரின் நினைவுக்கு வரும். உச்சிப்பிள்ளையார் திருத்தலம் உண்மையிலேயே சிவத்திருத்தலம். அங்கிருக்கும் சிவனின் பெயர் தாயுமானவன். அங்கிருக்கும் அம்பாளின் பெயர் மட்டுவார்குழலி. அப்பன் பெயர் தெரியாமல் பிள்ளையின் பெயர் சொல்லி அந்தக் கோவிலின் பெயரை உச்சரிக்கிறார்கள். புகழ் பெற்ற பிள்ளை ஒருவன் பிறந்துவிட்டால் தந்தையின் செல்வாக்கு காணாமல் போய்விடும் என்பார்கள். அந்த வகையில் தாயுமானவர், மட்டுவார்குழலி பெயரை மறந்து உச்சிப்பிள்ளையார் கோவில் என இன்று அழைக்கிறார்கள்.
ஆண்டவன் என்பவன் நம்முடைய தந்தையும் தாயுமாக இருக்கிறான். நம்முடைய சுக துக்கங்களை தீர்மானிக்கிறான். நமக்கொரு ஆபத்தென்றால் உதவுகிறான். நம்முடைய கனவுகளுக்கு சிறகுகள் தயாரித்து தருகிறான். நமக்கு முதலாகவும் மூலமாகவும் இருக்கிறான். காவேரி கரையின் அருகே உள்ள கோவிலில் தாயுமானவன் இருக்கிறான். காவிரியிலே பொங்கி பெருக்கெடுத்து வெள்ளம் வருகிறது. காவிரியின் மறுகரையில் தாய் இருக்கிறாள். இந்தக் கரையில் மகள் இருக்கிறாள். மகளுக்கு பிரசவ வலி வந்துவிடுகிறது. பிரசவ வலி வரும்போது தன்னுடைய தாய் அருகே இல்லையே என்று அவள் வருந்துகிறாள். வயிற்று வலியால் அவள் படும் அவதியைக் கண்டு தாயுமானவன் என்ற பெயரில் எழுந்தருளிக்கும் ஈசன், அங்கு வந்து அவளுக்கு பேறுகாலம் பார்க்கிறான். அந்தப் பெண்ணிற்கு குழந்தை பிறந்த பிறகு ஈசன் சென்றுவிடுகிறான். மறுநாள் அந்தப் பெண்ணின் தாயார் வருகிறார். அதன் பிறகுதான் அவர்களுக்கு தெரிகிறது பேறுகாலம் பார்த்தது ஈசனென்று. ஒரு பெண்ணின் வலிக்கு செவிகொடுத்து, அந்த வலிக்கு நிவாரணம் தரவேண்டும் என்று கருதி, அந்தக் குடிசைக்குள் எழுந்தருளி பிரசவம் பார்த்த காரணத்தினால்தான் அங்கிருக்கும் ஈசனுக்கு தாயுமானவன் என்று பெயர். இன்று உச்சிப்பிள்ளையார் கோவில் என அழைக்கப்படும் கோவிலைப் பார்த்தால் யானை படுத்திருப்பதைப்போல இருக்கும்.
திருஞானசம்மந்தர், யானை படுத்திருப்பதைப்போல அந்தக் கோவிலின் தோற்றம் இருப்பதைப் பார்த்துவிட்டு தாயுமானவனை ஆராதிக்கையில், 'நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ள றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே...' எனப் பாடினார். அந்தக் கோவிலின் தோற்றம் யானைபோல இருந்ததால் யானை யானை என்றே அப்பாடலை பாடினார் திருஞானசம்மந்தர். அந்தப் பாடலை பாடி முடிக்கும்போது, அவன் பெயரை உச்சரிக்கும்போது என் உள்ளம் குளிரும் என்கிறார்.
இன்றைக்கு உள்ளத்தின் வெப்பம் கொதிகலனாக பலருக்கு கொதிக்கிறது. உள்ளத்தை எப்படி குளிர்விப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதற்கு, இறைவனின் திருநாமத்தை ஒன்றி, காதலாகி கசிந்து, கண்ணீர் மல்க சொன்னால் உள்ளம் குளிர்ந்துவிடும் என்று திருஞானசம்மந்தர் ஒருவழி கூறுகிறார். ஆகவே ஒவ்வொரு திவ்யதேசம் மற்றும் திருத்தலத்திற்கும் பின்னாலும் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அந்த நீண்ட வரலாற்றுக்கு பின்னால் தமிழர்களின் பண்பாடும் வாழ்க்கை முறையும் தொக்கி இருக்கிறது. ஆபத்திற்கு உதவுவது அண்ணன், தம்பி மட்டுமல்ல ஆண்டவனாகவும் இருப்பான் என்பதற்கு தாயுமானவர் இன்றைக்கும் சாட்சியாக உள்ளார். தாயுமானவரை தாயும் ஆனவன் என்ற பொருளில் இன்றைக்கு மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.