உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024) நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.