கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், நந்தி வழிபாடு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
சிவபெருமானுக்கும் நமக்கும் நடுவில் இருப்பது நந்தி பகவான். நந்தி தேவனின் அனுமதி பெற்றுத்தான் சிவனை வழிபட வேண்டும் என்பது மரபு. நந்தி என்றால் பிறரை மகிழ்விப்பவன் என்று அர்த்தம். தமிழ்நாட்டில் நந்தி வழிபாடு காலங்காலமாக இருந்ததற்கு பல்லவர்களின் கொடியும் அவர்களது அரசு சின்னமுமே சாட்சி. நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் என்ன?
திருமணம், கல்வி, கட்டிடம், தொழில் ஆகியவற்றில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கு நந்தி வழிபாடு அவசியம். தடைகளை போக்கும் வல்லமை கொண்டவர் நந்தி தேவன். நந்தியில் அதிகார நந்தி, பரிகார நந்தி என இரண்டு வகைகள் உள்ளன. பரிகார நந்தி வழக்கான நந்தியைப்போலச் சிவனுக்கு எதிர்புறம் இல்லாமல் திரும்பி இருக்கும். இத்தகைய நந்தி உள்ள கோவில்களில் வழிபாடு செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
கும்பகோணத்திற்கு அருகே திருவைகாவூர் வில்வனேஸ்வரர் கோவிலில் இது போன்ற நந்தி உள்ளது. வேலூர் மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவிலிலும், விருத்தாச்சலத்தில் சுடர் கொழுந்தீஸ்வரர் கோவிலிலும், சென்னையில் திருமுல்லைவாயில் மாசிலாமணி நாதர் கோவிலிலும் இந்த அமைப்பைக் கொண்ட பரிகார நந்தி உள்ளது. உடனடியாக தடைகள் நீங்கி பலன் கிடைக்க பரிகார நந்தி வழிபாடு உதவும்.
செல்வாக்கு, தொழிலில் மேன்மை, அரசியலில் செல்வாக்கு கிடைக்க அதிகார நந்தியை வணங்க வேண்டும். வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு அருகே சென்னப்ப மலையடிவாரத்தில் சூரிய நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலில் வழிபாடு செய்தால் பொதுமக்களின் செல்வாக்கை அதிகம் பெறலாம். அரசியலிலும் வெற்றிபெறலாம். கன்னியாகுமரியில் நந்திக்கரை என்ற இடத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோவிலிலும், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள நந்தீஸ்வரர் கோவிலிலும் வழிபாடு செய்தால் தொழில் பிரச்சனைகள், வேலை வாய்ப்பு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
ஆந்திராவில் நந்தியால் என்ற ஊருக்கு அருகில் மகா நந்தி தலம் உள்ளது. அதைச் சுற்றி விநாயக நந்தி, கருட நந்தி, சூரிய நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி என ஒன்பது விதமான கோவில்கள் உள்ளன. இந்த ஒன்பது நந்தி தலங்களையும் வழிபட்டால் நல்ல புகழும் பெயரும் கிடைக்கும். இந்த இடத்திற்கு நந்தி மண்டலம் என்று பெயர்.
பொதுவாக பிரதோச காலத்தில் நந்தி தேவனுக்கு அருகம்புல் மாலையும், சிகப்பு அரிசி நிவேதனமும் விசேஷமானது. அதோடு சேர்த்து நெய் விளக்கேற்றி வழிபட்டால் கடன் நீங்கும், செல்வங்கள் பெருகும், புகழ் கூடும். மாதப்பிரதோசம் தவிர, ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை நித்ய பிரதோஷ காலம் இருக்கும். அந்த நேரத்திலும் நந்தியை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.