கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், கோவில் மண் வழிபாடு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”மண்ணும் பொன்னாகும் என்ற தலைப்பில் எளிமையான பரிகாரத்தைப் பற்றி உங்களுக்கு கூறுகிறேன். பொதுவாக புற்று மண், துளசிச்செடியின் மண், வில்வ மரத்தடி மண் ஆகிய மூன்று மண்களையும் வீட்டில் வைத்து பூஜை செய்தால் எல்லா வகையான தோஷங்களும் நிவர்த்தியாகும். குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்துவந்து பூஜை செய்வது பலரது வீடுகளிலும் வழக்கமாக உள்ளது. இது குலதெய்வத்தின் பரிபூரண அருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும். அந்த மண்ணை துணியில் முடிச்சு போட்டு வீட்டு வாசலிலும் கட்டி வைக்கலாம்.
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கிருந்து மண் எடுத்துவந்து வீட்டில் பூஜை செய்யுங்கள். அதன் மூலம், தெய்வ அனுக்கிரகம் அதிகரித்து எதிரிகள் தொல்லை நீங்கும். புற்றுமண்களிலேயே மிகவும் விஷேசமானது சங்கரன்கோவில் புற்றுமண். சங்கரன்கோவில் புற்றுமண்ணை வீட்டில் வைத்து பூஜை செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் புற்றுமண்ணை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செய்வினைக் கோளாறுகள் அகலும். பூத, பிசாசு தொல்லைகள் இந்த மண் இருக்கும் இடத்தை அண்டாது. கவசம்போல இருந்து நம்மை காக்கக்கூடியது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் புற்றுமண். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்தும் புற்று மண்ணை எடுத்து வந்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. அது வீட்டில் செல்வச்செழிப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.
வைத்தீஸ்வரன் கோவில், திருவள்ளூர் வீரராகவசாமி கோவில் புற்றுமண்ணை வைத்து பூஜை செய்தால் தீராத நோய்களும் தீரும். கம்பம் அருகேயுள்ள சாமுண்டிபுரத்தில் இருக்கும் சாமுண்டி அம்மனை வணங்கி அந்த புற்று மண்ணை எடுத்துவந்து பூஜை செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும். திருச்சி அருகேயுள்ள மணச்சநல்லூர் பூமிநாதர் கோவில் மண்ணை எடுத்துவந்து பூஜை செய்தால் வீடு கட்ட இருந்த தடைகள் அகன்று சொந்த வீடு யோகம் உண்டாகும்.
கயத்தாறு மண்ணும் அய்யனார் கோவில் மண்ணும் பயத்தை தீர்க்கக்கூடியது. இனம் புரியாத பயத்துடன் இருப்பவர்கள் இந்த மண்ணை எடுத்துவந்து பூஜை செய்யலாம். நம்முடைய மூதாதையர்கள் பல வருடங்களாக திதி கொடுக்காமல் இருந்தால் நமக்கு பித்ரு சாபம் உண்டாகி சண்டை சச்சரவுகள் என குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்படும். அவர்கள் ராமேஸ்வரம் சென்று அக்னிதீர்த்த கடலில் இருந்து மண்ணெடுத்து வந்து பூஜை செய்ய வேண்டும். பின்னர் அலகாபாத் சென்று திரிவேணி சங்கமத்தில் அந்த மண்ணை விடவேண்டும். இந்த பித்ரு பூஜை செய்தால் எந்தவித பித்ரு சாபம் இருந்தாலும் அகன்றுவிடும். எளிமையான பரிகாரமாகிய கோவில் மண்ணை எடுத்துவந்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதன் மூலம் எல்லாவிதமான நல்ல பலன்களும் நமக்கு கிடைக்கும். அதோடு, அந்தக் கோவில் தெய்வமும் நம் வீட்டில் குடிகொள்ளும்”.