/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/57_28.jpg)
கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், பைரவர் வழிபாடு குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”அஷ்டதிக் பாலகர்கள் என்று சொல்லக்கூடிய இந்திரன், அக்னி, எமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு பேரும் ஒருவரைக் கைவிட்டுவிட்டாலும் காக்கக்கூடிய கடவுள் பைரவர். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. ஒவ்வொரு திசைக்கும் எட்டு பைரவர்களாக 64 பைரவர்கள் காவலிருக்கிறார்கள். பைரவ வழிபாடு செய்யும்போது தீர்க்க முடியாத பிரச்சனைகள் தீர்ந்துவிடும். சில நேரங்களில் செல்வாக்காலும் செல்வத்தாலும் நம்முடைய எதிரிகள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அடக்கவே முடியாத அந்த எதிரிகளை அடக்க பைரவ வழிபாடு உதவும்.
சிவாலயங்களில் ஈசான மூலைகளில் தெற்கு நோக்கி காவலிருப்பவர் பைரவர். வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும் பயம் கொள்ளக்கூடியவர்கள் கால பைரவரை வணங்கலாம். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமிதான் பைரவரின் ஜென்மாஷ்டமி. அந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் பஞ்சதீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் இதுவரை முடிவுக்கு வராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
பொதுவாக சிவன் கோவிலில் இரவு பூஜை முடிந்த பின் சந்நதியை பூட்டி அதன் சாவியை காலபைரவரின் காலடியில் வைத்துவிட்டுச் செல்வார்கள். காலபைரவரை வணங்கினால் நம்முடைய உடமைகள் களவு போகாது என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம். அதேபோல பைரவரை வணங்கினால் செய்வினைப் பிரச்சனைகள் தீரும். குடுகுடுப்பைக்காரர்கள்கூட நாய்களை அடக்கிய பிறகே தங்களது மந்திரத்தை பிரயோகம் செய்ய முடியும். பைரவரின் வாகனமான நாய்கள் இருக்கும்வரை மந்திரம் வேலை செய்யாது.
தேய்பிறை அஷ்டமியில் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசும் நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேற வாய்ப்புகள் உருவாகும். ஆறு மாதங்கள் தேய்பிறை அஷ்டமியில் சிவப்பு நிற அரளிப்பூவால் பைரவரை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சனிப்பிரதோச நாட்களில் பைரவரை வழிபட்டால் வழக்குகளும் சண்டை சச்சரவுகளும் நீங்கி எல்லா வழக்கிலும் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் பைரவரை வணங்கி காலபைரவ அஷ்டகம் படித்து வந்தால் எத்துணை பெரியஎதிரிகளும் அழிந்துவிடுவார்கள்.
பைரவரை தாமரை இலைகளாலும் வில்வ இலைகளாலும் பூஜை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை நெய்தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடைகள் விலகும். பைரவரின் வாகனமான நாய்களுக்கு உணவிடுவதன் மூலம் பைரவரின் பரிபூரண அன்பைப் பெறலாம். அனைவரும் பைரவரை வணங்கி உங்களது பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள்”.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)