Skip to main content

'மை’ வசியம் செய்வது இவ்வளவு ஈஸியா? - ஆன்மிக மர்மங்களை விளக்கும் ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் 

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மீகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், எதிராளியை வசியம் செய்யும் முறைகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

நம்முடைய சொல் பேச்சை கேட்காதவர்களை நம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு வசியம் தேவைப்படுகிறது. உடலுக்கு ஓரளவிற்குத்தான் சக்தி உள்ளது. ஆனால், மனம் என்பது இயற்கையை மீறி காலம் கடந்து நிற்கக்கூடியது. அந்த மனதின் ஆற்றலால் பலவிதமான சாதனைகளை புரியமுடியும். சித்தர்கள் மாந்திரிகம், யந்திரம், தந்திரம் மூலமாக பலவிதமான சக்திகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். அவற்றுள் முக்கியமானது வசியம். 

 

வசியம் என்றால் பகைவனுக்குத் துன்பம், தொந்தரவு தராமல் பகையை வெல்வது. அதாவது நம்முடன் நட்பை உண்டாக்கிக் கொள்வது, நம்முடைய சொல் பேச்சை கேட்க வைப்பது. வசியத்தில் நேத்ர வசியம், மை வசியம், மந்திர வசியம் எனப் பல வகை உண்டு. இதில், நேத்ர வசியம் என்பது அதிகமான தியான பயிற்சியால் செய்யக்கூடியது. மந்திர வசியம் என்பது குரு மூலமாக மந்திரங்களைக் கற்றுக்கொண்டு செய்யக்கூடியது. மை வசியம் என்பது மிகவும் எளிமையான விஷயம். சாமானிய மக்களும் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம். 

 

மை வசியம் சித்தர்கள் மிகமிக ரகசியமாக வைத்திருந்த வசிய முறை. இதில், ஜனவசியம் என்று மக்களை வசியப்படுத்தக்கூடிய ஒருமுறை உள்ளது. நாட்டு மருந்துக்கடைகளில் கோரோசனை என்று ஒரு பொருள் கிடைக்கும். ஆன்மிகத்தில் அதிக சக்தி வாய்ந்த கோரோசனை, இறைவனின் சக்தியை கிரகிக்க கூடியதுமாகும். இந்தக் கோரோசனையை வீட்டில் வைத்தாலே கணவன், மனைவி சண்டை தீர்வது, குடும்பப் பிரச்சனை நீங்குவது என வீட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும், பில்லி, சூனியம் போன்ற கோளாறுகள் நமக்கு ஏற்படாது. 

 

வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமை கோரோசனையை தேனோடு கலந்து நெற்றியில் இட்டுக்கொண்டால் நல்ல வசியம் உண்டாகும். செவ்வாய், புதன் கிழமைகளில் பாலோடும், திங்கள், வியாழக்கிழமைகளில் நெய்யோடு கலந்தும் மையாக இட்டுக்கொள்ளலாம். இதன் மூலம், நாம் சொல்லுகிற பேச்சை எதிரிகள் கேட்கக்கூடிய வழி உண்டாகும். 

 

பச்சைக் கற்பூரம், சுத்தமான சந்தன அத்தர், சுத்தமான புனுகு, கஸ்தூரி, தாழம்பு செடியின் வேர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மை போல அரைத்து, நமச்சிவாயா மந்திரத்தை 108 முறை மனதிற்குள் நினைத்து இட்டுக்கொண்டால் நல்ல வசியம் கிடைக்கும். இந்த வசியத்தை வளர்பிறை செவ்வாய் கிழமைகளில் செய்வது மிகவும் சிறப்பு. இதைச் செய்ய முடியாதவர்கள் வசம்பு திலக வசியம் செய்யலாம். 

 

அனைத்து நாட்டு மருந்துக்கடைகளிலும் வசம்பு கிடைக்கும். காலையில் எழுந்து நெய் தீபமேற்றி, அதில் வசம்பைக் காட்டினால் வசம்பு கருகும். அதன் நுனிப்பகுதியில் இருக்கும் மையை எடுத்து திலகமாக இட்டுக்கொள்ளலாம். நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆற்றல் வசம்பு திலகத்திற்கு உண்டு. யாரையும் வசப்படுத்த பயன்படுத்தும் மந்திர மூலிகைதான் வசம்பு. எதிரிக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் எதிராளியை வசப்படுத்த இந்த வசிய முறைகளைப் பின்பற்றி அனைவரும் பயன்பெறுங்கள்.