Skip to main content

செவ்வாய் தோஷத்திற்கு இவ்வளவு ஈஸியான பரிகாரங்களா? - ஜோதிடர் கூறும் எளிய பரிகாரங்கள் 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

Lalgudi Gopalakrishnan

 

கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், செவ்வாய் தோஷம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

“திருமணத் தடைகளை ஏற்படுத்தும் நாகதோஷம் போன்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடியது செவ்வாய் தோஷம். ஒரு ஜாதகருக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் வரும். இது லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, சுக்ரனுக்கோ அமைப்பாக அமைந்தாலும் செவ்வாய் தோஷம் வரும். பல விதமான விதிவிலக்குகளும் செவ்வாய் தோஷத்திற்கு உண்டு. 

 

குரு பார்வை, கிரக யுத்தம் உட்பட பல விஷயங்களை வைத்து ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை தேர்ந்த ஜோதிடர் மட்டுமே சொல்லமுடியும். பொதுவாக தென்னிந்தியாவில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். செவ்வாய்க்கு காரணமான தெய்வம் முருகன். முருகப்பெருமானின் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமே இருப்பதும், தென்னிந்தியாவிற்கே ஆதிபத்ய கிரகமாக செவ்வாய் இருப்பதுமே அதற்கு காரணம். 

 

ஆனாலும், திருமணத்திற்கு முன்னால் சில பரிகாரங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, துவரையை தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் ஓரளவிற்கு கட்டுப்படும். செவ்வாய் கிழமையின் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரம் விஷேசமானது என்பதால் அந்த நேரத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படித்தால் மிகவும் நல்லது. அதன் மூலம் திருமணத் தடையும் நீங்கும். 

 

முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்றாலும் செவ்வாய் தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்கும். செவ்வாய் தோஷம் கடுமையாக உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று பரிகார பூஜைகள் செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும். சிவப்பு நிற சேலை, மஞ்சள் கயிறை சுமங்கலி பெண்களுக்குத் தானமாக செய்தால் செவ்வாய் தோஷத்தின் கடுமை குறையும். நான் மேலே கூறிய தோஷங்களையெல்லாம் செய்ய முடியாதவர்கள் வன்னி மரத்தை வணங்கலாம். 

 

கணவன் மனைவிக்குள் சண்டை மற்றும் குழந்தை பாக்கியத்தில் குறைபாட்டையும் செவ்வாய் தோஷம் ஏற்படுத்தக்கூடியது. எனவே செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரத்தை செய்துவிட்டு திருமணம் செய்யுங்கள். எந்த சுபகாரியங்கள் நடைபெற வேண்டும் என்றாலும் செவ்வாயின் பரிபூரண அனுகிரகம் தேவை. எனவே செவ்வாய் தோஷமுள்ளவர்கள் முருகனை வழிபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்”.