கந்தர்வ நாடி ஜோதிடரான லால்குடி கோபாலகிருஷ்ணன், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து தொடர்ந்து பேசிவருகிறார். அந்த வகையில், கணவன், மனைவி இடையேயான ஒற்றுமையை அதிகரிப்பதற்கான பரிகாரங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
“நிறைய குடும்பங்களில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை இல்லை. ஏதாவது ஒரு சண்டை, சச்சரவு இருந்துகொண்டே உள்ளது. இதற்கு என்ன காரணம்? ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாவது இடமும் பலமிழந்து காணப்பட்டாலும், எட்டாம் இட அஷ்டம ஸ்தானம் கெட்டுப்போனாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. பொதுவாக மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்; கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். சில நேரங்களில் கணவன், மனைவி பிரச்சனை நீதிமன்றம்வரை சென்றுவிடுகிறது. என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் அமைதி உண்டாகும் என்பதைப் பார்க்கலாம்.
குருவாயூர் கோவிலில் ராசலீலா என்ற நடனம் நடத்தப்படுகிறது. திருமண நாளில் அங்கு சர்க்கரை துலாபாரம் செலுத்தினால் குடும்பப்பிரச்சனை நீங்கும். மாங்கோட்டுகாவு என்ற இடத்தில் உள்ள பகவதி கோவிலில் இடைக்கலசம் என்ற பூஜையைச் செய்து அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பரிகாரத்தால் பலரும் பலன்பெற்றுள்ளனர்.
வளர்பிறை பிரதோச காலத்தில் சிவன் கோவிலில் அம்மன் சந்நிதியில் தாலிக்கயிற்றை பூஜை செய்து திருமணமான பெண்களுக்கு பிரசாதமாக வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும். கும்பகோணம் அருகேயுள்ள திருசக்திமுற்றம் சென்று வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வதற்குகூட வாய்ப்புகள் உருவாகும்.
திருப்பதி அலர்மேல் மங்கை தயாரின் திருமண கோலத்தை தரிசித்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். எந்த சிவன் கோவிலாக இருந்தாலும் இரவில் நடக்கும் பள்ளியறை பூஜையை ஒரு மாதம் தரிசித்தால் கணவன், மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கேரளாவின் ஐயப்பன் கோவில், குருவாயூர் கோவிலில் ஐக்கிய மத்திய புஷ்பாஞ்சலி பூஜை நடைபெறும். அதில் கலந்துகொள்வதும் நல்ல பலனைத் தரும். அதேபோல, ரோஜா நிறத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்தால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகமாகும்.
நான் மேற்கூறிய பரிகாரங்கள் அனைத்தும் பொதுவான பரிகாரங்கள். அவரவர் ஜாதகங்களை ஜோதிடரிம் கொடுத்து வேறு தோஷங்கள் ஏதேனும் இருந்தால் அதனையும் நீக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இல்லற வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி, கணவன், மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரித்து, குடும்ப ஒற்றுமை மேலோங்கும்”.