Skip to main content

கண்டங்கள் களையும் கீழையூர் கடைமுடிநாதர்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Keezhaiyur Kadaimudinathar Temple

 

இறைவன்: கடைமுடிநாதர் (அந்தஸம் ரக்ஷணேஸ்வரர்).

இறைவி: அபிராமியம்மை.

விசேஷமூர்த்தி: கிளுவைநாதர்.

விநாயகர்: கடைமுடி விநாயகர்.

புராணப்பெயர்: திருக்கடைமுடி, கிளுவையூர்.

ஊர்: கீழையூர்.

தலவிருட்சம்: கிளுவை மரம்.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், கருணா தீர்த்தம்.

 

இவ்வாலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களுள் 72-ஆவது தலம்; காவிரி வடகரையில் 18-ஆவது தலம். திருஞான சம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் கீழையூர் கடைமுடிநாதர் ஆலயம்.

 

சிறப்பம்சங்கள்

 

✷ மூலவர் கடைமுடிநாதர் மேற்கு நோக்கி சுயம்புலிங்க மூர்த்தியாக எழுந்தருளியுள்ள இந்த ஆலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.

 

✷ இறைவனின் கடைமுடிநாதர் என்ற பெயரினால், நாம் நமது ஆயுளின் கடைசிக் காலத்தில் அவரைப் பற்றவேண்டும் என்றும்; அந்தஸம் ரக்ஷணேஸ்வரர் என்ற பெயரினால் நமது அந்திமக் காலத்தில் அதாவது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் அவரே என்றும் நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகிறார்.

 

✷ மூலவரான சிவலிங்கத்தில் ஷோடசலிங்கம் என்றழைக்கப்படும் 16 கோடுகள் உள்ளன. இவரை வணங்குபவர்கள் 16 வகையான செல்வங்களையும் அடைவார்கள் என்று தல புராணம் உரைக்கிறது.

 

✷ மறைமதியை நிறைமதியாக்கி திருக்கடவூரிலே அற்புதம் நிகழ்த்திய அன்னை, அதே பெயரில் அபிராமியம்மை என்ற திருநாமத்துடன் திருக்கடவூரைப் பார்த்தவண்ணம் தெற்கு நோக்கி நின்ற நிலையில் வரப்ரசாதியாக இருக்கிறாள்.

 

✷ காவிரியில் நீராடி, அபிராமி அன்னையை வெள்ளிக்கிழமை தரிசனம் செய்து சௌபாக்கிய திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

 

✷ திருமணத்தடையுள்ளவர்கள் இந்த அம்பாளுக்கு வித்தியாசமான பிரார்த்தனையாக திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்குத் தாலிகட்டி வேண்டிக் கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியைத் தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். "இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலியாகவே இருப்பர் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் ஆலய அர்ச்சகர்.

 

✷ பிரகாரத்திலுள்ள நவகிரக சந்நிதியில் வலதுபுறம் திரும்பிய அறுங்கோண வடிவிலுள்ள ஆவுடையாரின் மீது நவகிரகங்கள் நேர் வரிசையில் இல்லாமல் ஒருவருக்கொருவர் முன்னும் பின்னுமாகப் பார்த்திருப்பது தனிச்சிறப்பு.

 

✷ காவிரி நதி வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஓட்டத்தில், காவிரியின் வளையம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மேற்கு நோக்கிய இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் வளையமில்லாமல் இருக்கிறார். இது சிறப்பான அமைப்பு.

 

✷ இதேபோல் மேற்கு நோக்கிய பைரவரின் இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் ஒன்றுமில்லாமல் அருள்புரிவது சிறப்பு.

 

✷ விக்ரம சோழன் கால கல்வெட்டில் இத்தல ஈசன் "திருச்சதைமுடி உதயமகாதேவர்' என்று குறிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நந்திவர்ம பல்லவன், பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் கண்டெடுக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரரின் படம் ஆதித்யசோழர் கால கல்லமைப்புடன் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அது தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் உள்ளது.

 

✷ எவரிடமும் சொல்ல முடியாத சங்கடமான சூழ்நிலையில் உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று கடைமுடி விநாயகரை தரிசித்து வழிபட்டால் வம்பு வழக்குகள் தீர்ந்து வளமுடன் வாழலாம்.

 

✷ மாத சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம் மற்றும் சிவாலயத்திற்குரிய அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடக்கின்றன.

 

✷ கட்டளைதாரர்கள் வேண்டுதலுக்கிணங்க இவ்வாலயத்தில் மிருத்யுஞ்சய ஹோமம் நடக்கிறது. இந்த ஹோமம் செய்து வழிபட்டால் எமனையும் வெல்லலாம். மிருத் யுஞ்சயம் என்றால் எமனை வெல்வதென்று பொருள்படும். பொதுவாக, ஒருவரது ஜாதகத்தில் குரு, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால், அவருக்கு எதிர்பாராத விபத்தின் மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால் அவருக்கு எதிர்பாராத விபத்தின் மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இதுபோன்று பல கிரக காரணங்களால் ஒருவருக்கு மரண கண்டங்கள் வரும்போது, அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள செய்யப்படும் ருத்ர வழிபாடே இந்த மிருத்யுஞ்சய ஹோம வழிபாடாகும்.

 

சிவனை அழிக்கும் கடவுள் என்று வேதங்கள் கூறுவதாகச் சொல்கின்றனர். ஆனால் சிவன் அழிக்கும் கடவுளல்ல; அளிக்கும் கடவுள். ஈசனிடம் வரம்பெற்ற இராவணனை அழிக்க திருமாலே மனித ரூபம் தாங்கி வரவேண்டியதாயிற்று. எனில் வரமளித்த ஈசன் எப்படிப்பட்டவன்? திருமால் மேற்சொன்ன இந்த ஹோமத்தைச் செய்தே ஈசனிடம் இருந்து சுதர்சன சக்கரத்தைப் பெற்றார். மிருகண்டு முனிவர் தனது மகன் மார்க்கண்டேயனுக்காக இந்த ஹோமத்தைச் செய்ய, அவன் தீர்க்காயுளைப் பெற்றான்.

 

இறுதியில் ருத்ரரை மனமுருக வேண்டி அபிஷேக நீரை ஜாதகரின் மேல் ஊற்றி அங்க சுத்தி செய்வித்து ஈசனை வணங்க, ஜாதகருக்கு சகலபாவமும் தீர்ந்து நிறைந்த ஆயுள்பலம் ஏற்படும். அதுமட்டுமல்ல அதிக எதிரிகளைக் கொண்டவர்கள் இந்த ஹோமத்தைச் செய்ய, எதிரிகள் பலம் குறைந்து இவர்கள் பலம் அதிகரிக்கும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள் ஆலய அர்ச்சகர்களான சங்கர் குருக்கள், சுவாமிநாத குருக்கள்.

 

காவிரி வடக்கு முகமாக வந்து, பின் மேற்காக வளையம்போல் காட்சி தந்து ஓடுகிற மகிமை வாய்ந்த தலமாம். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களுக்கு மன அமைதியைத் தருகிற தலமாம். சஷ்டியப்தப் பூர்த்தி, சதாபிஷேகம், மிருத்யுஞ்சய ஹோமப் பூஜைகள் நடக்கிற தலமாம். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ 16 பட்டைகளுடன் ஷோடஷலிங்கமாய் அருள்கிற தலமாம். நெடுநாட்கள் முடிவுக்கு வராத பிரச்சினைகளுக்கு நல்ல முடிவைத் தருகிற தலமாம். கீழையூரில் அருள்தரும் அன்னை அபிராமி சமேத கடைமுடிநாதரை விநாயகர் பிறந்த மாதமான ஆவணி மாதத்தில் கடைமுடி விநாயகருடன் வழிபடுவோம். வாழ்வில் அதீத பலன்களைப் பெறுவோம்.

 

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். அமைவிடம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செம்பனார்கோவில். அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழித் தடத்தில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழையூர். கீழையூர் பஸ் நிறுத்தத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது கடைமுடிநாதர் கோவில். மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் மேலப்பாதியைக் கடந்தும் கீழையூர் வரலாம். பஸ் வசதி குறைவாக உள்ளது.

 


 

Next Story

அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் புகுந்த இளைஞர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

அரிவாளுடன் இளைஞர் ஒருவர் கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டு வெளியே வராமல் போக்கு காட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த பகுதியில் மிகவும் பிரபல கோவிலாக இருப்பதால் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீரென இளைஞர் ஒருவர் கோவிலின் கருவறைக்குள் அரிவாளுடன் சென்றுள்ளார். பொதுமக்கள் வெளியே வர சொல்லியும் அந்த இளைஞர் கருவறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் பக்தர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கோவிலுக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை வெளியே கொண்டு வர முயற்சித்தும் அந்த இளைஞர் வர மறுத்தார். மேலும் கையில் இருந்த அரிவாளை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினரின் உதவி நாடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அவர் மீது தண்ணீரை பீச்சி அடித்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர்.

The youth entered the sanctum sanctorum of the temple with a sickle; Shocked at the trial

பின்னர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி அந்த இளைஞர் வெளியே கொண்டுவரப்பட்டார். நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், காதல் விவகாரத்தால் ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் சென்றதும் தெரியவந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கைகளை துணியால் கட்டி வெளியே கொண்டு வரப்பட்ட அந்த இளைஞர் ஆட்டோவில் ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

கோவில் திருவிழாவில் யானைக்கு மதம்;பக்தர்கள் பதறி அடித்து ஓட்டம்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
elephant Angry in temple festival; Devotees panic and run

கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்து பக்தர்கள் தெறித்து ஓடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பூரம் திருவிழா என்பது மிகவும் விமரிசையானது. கேரளப் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் யானைகள் ஊர்வலம் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. அண்மைக்காலமாகவே திருவிழாக்களில் பங்கேற்கும் யானைகளுக்கு மதம் பிடிப்பது உள்ளிட்ட செயல்களால் பதற்றம் ஏற்படுவது வழக்கம்.

இதன் காரணமாக கேரளாவில் திருவிழா நேரங்களில் யானை ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் யானை பாதுகாப்பு படையினர் என்ற அமைப்பு கண்காணிப்பிற்காக நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் சாலச்சேரி முளையம்பரம்பத்துக்காவு என்ற கோவிலில் பூரம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிழாவில் பங்கேற்க அலங்காரம் செய்யப்பட்டு யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்தது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த யானை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகங்களோடு இணைந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திடீரென யானைக்கும் மதம் பிடித்ததால் அந்தப் பகுதி இருந்த மக்கள் தலைதெறித்து ஓடினர். இந்த சம்பவத்தில் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் யானையானது மீட்கப்பட்டு அந்த இடத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டது.