
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதின் நான்காம் பகுதி பின்வருமாறு...
பல ஆண்டுகள் கழித்து தன் மகளை சந்தித்த விஸ்வாமித்திரர், அவளை கணவன் துஷ்யந்தனோடு சேர்த்து வைப்பதற்காக துஷ்யந்தன் ராஜ்யத்திற்கு அழைத்துச் சென்றது பற்றி கடந்த பகுதியில் கூறியிருந்தேன். மிகப்பெரிய அரண்மனையில் ரிஷிகளும் மந்திரிகளும் வரிசையாக அமர்ந்து இருக்க, சிம்மாசனத்தில் துஷ்யந்தன் அமர்ந்திருந்தான். விஸ்வாமித்திரர் உள்ளே நுழைந்ததும் வசிஷ்டரைத் தவிர அனைவரும் எழுந்து நின்றனர். விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காது. துஷ்யந்தா உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று கம்பீரமான குரலில் சொன்னார் விஸ்வாமித்திரர். இது சகுந்தலை, இது அவளுடைய மகன் பரதன்... இருவரையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். பதிலுக்கு, ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என துஷ்யந்தன் கேட்கிறான்.
பின், சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டே அம்மா நீ யாரு, அந்தக் குழந்தை யாரு என சகுந்தலையிடம் கேட்கிறான் துஷ்யந்தன். நான்தான் உன் காதலி... இது உனக்குப் பிறந்த குழந்தை என்றெல்லாம் சகுந்தலை சொல்லாமல் அற்புதமான ஒரு பதிலைக் கூறுவாள். குழந்தாய் தந்தைக்கு ஒரு வணக்கம் சொல்லு என சகுந்தலை பரதனிடம் கூற, அவனும் வணக்கம் சொல்லுவான். உடனே துஷ்யந்தன், நீங்கள் தவறான இடத்திற்கு வந்துள்ளீர்கள் என்பான். ரிஷி ஒருவர் கொடுத்த சாபத்தால் அவனுக்குப் பழைய விஷயங்கள் அனைத்தும் மறந்துவிட்டதால் இவர்களை யாரென்று அவனுக்குத் தெரியவில்லை. என் மகளை ஏற்றுக்கொள் என்று விஸ்வாமித்திரர் கூற, அதற்கு துஷ்யந்தன் மறுக்க என இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுவிடுகிறது. ஒருகட்டத்தில் என் தலையை வேண்டுமானாலும் உன் பாதத்தில் வைக்கிறேன், என் மகளை ஏற்றுக்கொள் என்கிறார். யாருக்கும் தலை வணங்காத விஸ்வாமித்திரர், தன் தலையை துஷ்யந்தன்பாதத்தில் வைக்கிறேன் என்று சொல்லியதும் வசிஷ்டர் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
இப்படி இருக்கையில், துஷ்யந்தனுக்குச் சாபம்விட்ட அந்த ரிஷி அந்த சாபத்தை விலக்கிக்கொள்கிறார். அவர் சாபத்தை விலக்கியதும் துஷ்யந்தனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்துவிடும். சகுந்தலை என்று கத்திக்கொண்டே ஓடிவந்து தன் மனைவியை கட்டிப்பிடித்து அழுது, அவளை அழைத்துக்கொண்டு சென்று தன்னுடைய சிம்மாசனத்தில் அமரவைப்பான். துஷ்யந்தனுடைய அப்பா, சகுந்தலையை மருமகளாக ஏற்றுக்கொண்டு, தன்னுடைய பேரனுக்கு பரதன் எனப் பெயர் சூட்டி, இந்த நாட்டை ஆள்வதற்கும் பரம்பரையை விருத்தி செய்வதற்கும் உன்னையே நியமிக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு பட்டமும் சூட்டிவிடுவார். இந்த இடம்தான் மகாபாரதக் கதையின் ஆணிவேர். அதற்குப் பிறகு பல தலைமுறைகள் உருவாகி மகாபாரதம் கதை நீண்டுகொண்டே செல்லும். மகாபாரதக் கதைக்கு விருட்சமாக இருந்ததே சகுந்தலையின் மகன் பரதன்தான்.