Kalaignanam

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதின் மூன்றாம் பகுதி பின்வருமாறு...

Advertisment

கடந்த பகுதி...

மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து கடந்த இரு பகுதிகளில் பேசியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சியைத் தற்போது பார்க்கலாம். பல தலைமுறைகள் கடந்து பரதன் என்பவரை மையப்படுத்தி கதை வந்து நிற்கிறது. அந்தப் பரதன் சகுந்தலையின் மகன். சகுந்தலை, விஸ்வாமித்திரருக்கும் மேனகிக்கும் பிறந்த குழந்தை. வசிஷ்டருக்கு விஸ்வாமித்திரர் வில்லன். விஸ்வாமித்திரருக்கு வசிஷ்டர் வில்லன். தனக்கு நிகராக யாரும் இல்லை என்ற வரத்தை விஸ்வாமித்திரர் தவம் புரிந்து வாங்கிவிட்டார். அந்த வரத்தை எப்படியாவது பொய்யாக்க வேண்டும் என்று தேவலோக தாசிகளில் ஒருவரான மேனகி அவரிடம் அனுப்பப்படுகிறார். விஸ்வாமித்திரர் பிரம்மச்சாரி. அவருடைய கொட்டத்தை அடக்கி வைராக்கியத்தை உடைக்கும்படி ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு வா என்று வசிஷ்டரும் இந்திரனும் தேர்ந்து அவளை அனுப்பிவைக்கின்றனர்.

Advertisment

அப்படி வந்த மேனகி, தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரை மயக்கி அவருடன் உடலுறவு கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றுவிடுகிறாள். “நீ ஏதோ தவறு செய்துவிட்டாய்... எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குழந்தையை நான் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று விஸ்வாமித்திரர் கூறிவிடுகிறார். அவள், “உனக்குப் பிறந்த குழந்தைதானயா... நீ ஏற்றால் என்ன, ஏற்காவிட்டால் என்ன... நான் இந்திரலோகத்திற்குச் செல்கிறேன்” என்று கூறி அந்தக் குழந்தையை அவர் காலடியில் வைத்துவிட்டு கிளம்பிவிடுகிறாள். விஸ்வாமித்திரரும் அங்கிருந்து நகர்ந்துவிட, அந்தக் குழந்தை அனாதையாக கத்தி அழுதுகொண்டிருந்தது. சாகுந்த பட்சி என்ற பறவை அங்கு வந்து தனது இறக்கையை குடைபோல விரித்து மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் அந்தக் குழந்தையைப் பாதுகாத்தது. அந்தக் குழந்தைதான் சகுந்தலை என அறியப்படுகிறது.

பின்னர், அந்த ஏரியாவில் இருந்த கண்வர் ரிஷி என்ற ஒரு ரிஷி, அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். கண்வர்ரிஷியின் ஆசிரமத்தில் வளர்ந்துவந்த சகுந்தலை, ஒரு காலத்தில் பருவமடைகிறாள். ஒருநாள் தன் ஆட்களுடன் தீர்த்த யாத்திரைக்கு அந்த ரிஷி கிளம்புகிறார். கிளம்புவதற்கு முன், நான் வரும்வரை இவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் கூறிவிட்டுக் கிளம்புகிறார்.

Advertisment

அந்த சமயத்தில் மகாராஜா துஷ்யந்தன் வேட்டைக்கு வருகிறார். வந்த இடத்தில் சகுந்தலையை பார்த்த துஷ்யந்தன், அவள் அழகைக் கண்டு வியந்துவிடுகிறான். “நீ யார் மகள்” என அவளிடம் கேட்க, அவள் “நான் கண்வர்ரிஷியின் வளர்ப்பு மகள்” என்கிறாள். அவளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக துஷ்யந்தன் கூறுகிறான். அவளும் சம்மதம் தெரிவித்துவிட இருவருக்கும் இடையே உடலுறவு ஏற்பட்டு சகுந்தலை கர்ப்பம் ஆகிவிடுகிறாள். பின், அங்கிருந்து கிளம்பிய துஷ்யந்தன், “தீர்த்த யாத்திரையிலிருந்து உன் தந்தை திரும்பி வரட்டும்... சேனைகளுடன் வந்து முறைப்படி அவரிடம் ஆசீர்வாதம் பெற்று என் அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறுகிறான். அவளிடமிருந்து விடைபெற்று சென்றுகொண்டிருந்த துஷ்யந்தன், எதிரே வந்த ஒரு ரிஷி மீது மோதிவிடுகிறார். அதில் கோபமான ரிஷி, “எவளை நினைத்துக்கொண்டே வந்து என் மீது மோதினாயோ, அவளை நீ மறந்துவிடுவாயாக” எனச் சாபம் கொடுத்துவிடுகிறார். அதேபோல துஷ்யந்தன் அவளை மறந்துவிடுகிறான். இப்படி ஒரு பெண்ணை விரும்பி, அவளை கர்ப்பம் ஆக்கினோம் என்பது அவன் நினைவிலேயே இல்லை.

ஆண்டுகள் பல கழிந்தன. தீர்த்த யாத்திரைக்குச் சென்ற கண்வர்ரிஷி திரும்பி வந்துவிடுகிறார். ஐந்து வயது குழந்தையுடன் சகுந்தலை இருப்பதைக் கண்டு அவருக்கு அதிர்ச்சி. பின், நடந்தது குறித்து அவளிடம் விசாரிக்கையில், துஷ்யந்தன் மன்னன் என்று ஒருவர் வந்தார்... “நீங்கள் வந்த பிறகு உங்கள் சம்மதத்துடன் என்னை அழைத்துச் செல்வதாகக் கூறினார்” என நடந்தது அனைத்தையும் விவரிக்கிறாள். “எப்போது உன் கற்பை நீ அவனுக்குக் கொடுத்தியோ... இனி நீதான் அவனிடம் சென்று பேச வேண்டும். நான் வந்து பேசி அவனிடம் அவமானப்பட தயாராக இல்லை. அவன் உன்னை ஏற்றுக்கொண்டால் சேதி அனுப்பு. நான் வந்து உன்னைப் பார்க்கிறேன்” எனக் கூறிவிடுகிறார் கண்வர்ரிஷி. உடனே துஷ்யந்தனை சந்திக்க தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு கிளம்பிய சகுந்தலை, பல மைல்கள் நடந்தே செல்கிறாள்.

எங்கெல்லாம் தங்க முடியுமோ அங்கெல்லாம் தங்குகிறாள். அப்படி ஒரு இடத்தில் தங்கியிருக்கையில் அங்கிருந்த சிங்கம், புலிகளோடு சிறுவன் பரதன் விளையாடிக்கொண்டிருக்கிறான். பரதன் பார்க்க ராஜஅம்சத்துடன் தெய்வீகமான குழந்தையாக இருப்பான். அப்போது அந்த வழியாக விஸ்வாமித்திரர் வருகிறார். ஒரு குழந்தை சிங்கத்துடன் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம். அருகே வந்து, “குழந்தாய் நீ யாரப்பா” என்கிறார். அதற்குப் பரதன், “நான் வீரன்” என்கிறான். பதிலுக்கு “என்ன வீரன்” என அவர் கேட்க, ”நான் மகாவீரன்” என்கிறான். “யார் மகன் நீ” என அவர் கேட்க, “நான் மகாராஜரின் மகன், என் அம்மா சகுந்தலை” என்கிறான். “உன் அம்மாவை நான் பார்க்கலாமா” என அவர் கேட்க, விஸ்வாமித்திரரை அம்மாவிடம் அழைத்துச் செல்கிறான் பரதன்.

சகுந்தலையிடம் “நீ யாரம்மா” என்று விஸ்வாமித்திரர் விசாரிக்க, “நான் விஸ்வாமித்திரரின் மகள்” என்று கூறுகிறாள் சகுந்தலை. விஸ்வாமித்திரருக்கு அதிர்ச்சி. அவருக்குப் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவுக்குவருகிறது. “உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தப் பாவி விஸ்வாமித்திரர் நான்தான்மா” என்று அவர் கூற, “அப்பா” என்று கட்டியணைத்து சகுந்தலை அழுதுவிடுகிறாள். உடனே பரதனை தூக்கித் தன் நெஞ்சில் வைத்து கொஞ்சுவார் விஸ்வாமித்திரர். அதன் பிறகு, “துஷ்யந்தனோடு உன்னை சேர்த்துவைக்கிறேன்” என்று கூறி, சகுந்தலையையும் பரதனையும் விஸ்வாமித்திரர் அழைத்துச் செல்வார். துஷ்யந்தன் ராஜ்யத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.