Skip to main content

நம் வீட்டில் காக்கைக்கு வைக்கும் சோறை சாப்பிடவில்லையென்றால்...

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

 

ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்.

ஒருசிலருக்கு அற்பஆயுள், மத்திம ஆயுளாக அமைந்து, துரதிர்ஷ்டவசமாக துர்மரணம் ஏற்படும். விமானம், ரயில், கார், பேருந்து, இரு சக்கர வாகனம், நெருப்பு, தண்ணீர் போன்றவற்றால் விபத்துக்களாகி மரணமடைவதும், தற்கொலை அல்லது கொலையால் மரணமடைவதும் துர்மரணம் எனப்படும். ஒரு மனிதன் தன்னுடைய ஆயுள் முடியும்வரை எக்காரணத்தைக்கொண்டும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. ஒரு வேளை மீறி செய்து கொண்டால் அந்த குடும்பத்தினர், வம்சம் பாதிக்கும். மேலும் தற்கொலை செய்துகொண்டவர்கள் தன்னுடைய ஆயுள் முடியும்வரை பேயாக அலைய நேரிடும். விண்ணுலகம் செல்ல முடியாது. அடுத்த பிறவி மிகவும் மோசமாக அமையும்.
 

ganapathy homam

துர்மரணம் எதனால் ஏற்படுகிறது? ஜாதகத்தில் அற்ப ஆயுள், மத்திம ஆயுள் என்று இருந்து, முன்ஜென்மாவில் செய்த மிகப்பெரிய பாவம், சாபத்தினால் நிகழ்கிறது. உதாரணமாக பலர் விமான விபத்து, ரயில் விபத்து, பேருந்து விபத்து, கூட்ட நெரிசல், நெருப்பால், தண்ணீரால் ஒன்றாக மரணமடைவார்கள். இது எப்படி பலர் ஒன்றுகூடி ஒரே இடத்தில் மரணமடைகிறார்கள் என்றால், ஒரு நாட்டில் சட்டதிட்டங்கள் என இருந்தாலும், எமர்ஜென்சி காலத்தில் அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் செல்லாது என்பதுபோல, ஜோதிட சட்டதிட்டங்கள் சில நேரங்களில் துர்மரணங்களில் செல்லுபடியாகாது. இவர்களுக்கு துர்மரணம் என்று ஆண்டவன் விதியில் எழுதிவிடுகிறான் என்று பொருள். இதில் ஒருசிலர் துர்மரணத்திலிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். இதற்குக்காரணம் இவர்கள் இன்னும் பூமியில் வாழவேண்டுமென்பதும், பூர்வ புண்ணியம் நன்றாக இருப்பதுமே. ஆயுள் நன்றாக இருப்பதாக அர்த்தம்.
 

ganapathy homam

துர்மரணம் அடைந்தவர்களுக்கு திலஹோமம் செய்யவேண்டும் என்பது தர்ம, வேத சாஸ்திர நியதி. திலஹோமம் செய்யாவிட்டால் துர்மரணம் அடைந்தவர்களின் ஆவியால் நம் வாழ்க்கை மற்றும் வம்சம் பாதிக்கும்.திலஹோமம் என்பது பச்சை நெல்லும், கறுப்பு எள்ளும் சேர்த்து அக்னியில் போடுவது. மகாலட்சுமியின் இரத்தம்தான் கறுப்பு எள். ஆனால் யார் பெயரைச் சொல்லிபச்சை நெல்லும், எள்ளையும் போட்டு நெய்யை விடுகிறோமோ, அவர்கள் நெருப்பின்மூலம் வந்து அதை வாங்கிக் கொள்கிறார்கள்.

சாரதா திலஹோமம், சந்தான திலஹோமம், ருத்திர திலஹோமம், முக்தி திலஹோமம் என பல வகைகள் உள்ளன. இந்த திலஹோமத்தை கடற்கரை, நீர்நிலைகளில் செய்யவேண்டும். உதாரணமாக, ராமேஸ்வரம், சேதுக்கரை, கன்னியாகுமரி, திருவெண்காடு, பூம்புகார், வேதாரண்யம் கோடியக்கரை, தனுஷ்கோடி போன்ற இடங்களில் செய்யவேண்டும். இராமேஸ்வரத்தைவிட சேதுக்கரையில் பிதுர் தர்ப்பணம், திலஹோமம் செய்வது சிறப்பு. சேதுக்கரை திருப்புல்லாணிக்கு அருகில் உள்ளது. திருவனந்தபுரம் பரசுராமர் ஆலயத்தில் தினசரி பிதுர் தர்ப்பணம், திலஹோமம் செய்கிறார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பெண்களும் தர்ப்பணம் செய்யலாம். அவர்களும் இலையில் உட்கார்ந்து சாதம் வைத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.

கர்நாடகாவில் கடற்கரையில் உள்ளது திருக்கோகர்ணம். அங்கும் செய்யலாம். தேவிப்பட்டினம், காசி, ஹரித்வார், கயா போன்ற இடங்களில் பிதுர் தர்ப்பணம், திலஹோமம் செய்யலாம். பெற்றெடுத்த தாய்க்கு மட்டும் மாத்ருகயாவில் திதி, தர்ப்பணம் செய்யலாம். தாயாருக்கு திதி, தர்ப்பணம், கொடுக்க மிகச்சிறந்த இடம் அலகாபாத் அருகிலுள்ள மாத்ருகயாவாகும்.

திதி, தர்ப்பணம், திலஹோமம் போன்றவற்றை தர்ப்பையால் செய்த மோதிரம் அணிந்து செய்யவேண்டும். தர்ப்பைதான் மீடியேட்டர். அதற்காகத்தான் தர்ப்பை மோதிரம் போடுகிறார்கள். வில்வமரம், மாமரம், பலாமரம் போன்றவற்றின் அடியில் திதி, தர்ப்பணம் செய்வது விசேஷம். அவ்வாறு செய்யும்பொழுது பல்வேறு தானங்கள் - அதாவது குடைதானம், ஆடைதானம், செருப்புதானம், வஸ்திரதானம், புத்தக தானம் செய்யவேண்டும். குடைதானம் செய்தால் நம் பெற்றோர்கள், முன்னோர்கள் நிழலில் விண்ணுலகத்திற்குச் செல்வார்கள்.

பொதுவாக எந்த ஹோமம், யாகம், பரிகாரம், தர்ப்பணம் செய்தாலும் கடைசியில் அன்னதானம் செய்யவேண்டும் என்பது நியதி. படையல் போட்ட பிறகு அன்னதானம் செய்யவேண்டும். அன்னதானத்தில் முக்கியமாக நவதானியம் சேர்க்கவேண்டும். நவதானியங்கள் சேர்த்து படையல் போட்டு பாயசமும் சேர்க்கவேண்டும். அப்படிச் செய்வதால் பிதுர்கள் திருப்தி அடைவர். தர்ப்பணம், திலஹோமம் செய்யும்பொழுது பிண்டம் வைப்பார்கள். அரிசி மாவு, கறுப்பு எள், வாழைப்பழம், தேன், பால், இளநீர் கலந்து பிண்டம் செய்யவேண்டும். அதை திதி முடிந்தபிறகு ஓடுகிற நீர்நிலைகளில் விட்டுவிடவேண்டும். ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விரதம் இருக்கவேண்டும். அன்றைய தினம் எந்வொரு. சுபகாரியமும் செய்யக் கூடாது என்பது தர்ம சாஸ்திர விதி.
சிலர் அமாவாசையன்று சுபகாரியம் செய்யலாம் என்று தொடங்குவார்கள். இது சாஸ்திர விரோதமாகும்.அமாவாசை என்பது முன்னோர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நாள். இதில் சுபகாரியம் செய்யக்கூடாது என்பது சாஸ்திர விதி.

தினமும் வீட்டில் காக்கைக்கு சிறிதளவாவது சோறு வைக்கவேண்டும். நம் முன்னோர்கள் காக்கை ரூபத்தில் வருகிறார்கள் என்பது பொருள். நம் வீட்டில் காக்கைக்கு வைக்கும் சோறை அது வந்து சாப்பிடவில்லையென்றால் நம் வீட்டில் ஏதாவது தவறு, குற்றம் உள்ளதாக அர்த்தம். முன்னோர்களுக்கு விருப்பம் இல்லையென்று அர்த்தமாகும். எப்பொழுதாவது காக்கைக்கு அன்னம் வைப்பதைவிட, தினமும் அன்னம் வைப்பதுதான் சிறப்பாகும். பொதுவாக ஜாதகத்தில் கடுமையான தோஷங்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கு சிறந்த பரிகாரம் கோதானம், ஆடைதானம், அன்னதானம், எள் தானம் ஆகும். ஒரு மனிதன் தன்னுடைய ஆயுளில் ஆறுமுறை கோதானம் செய்யவேண்டும் என்பது தர்ம சாஸ்திர விதியாகும். கோதானம், ஆடைதானம், எள்தானம் ஆகியவை சிறந்த பரிகாரம் என கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒருமுறையாவது கோதானம் செய்யவேண்டும்.
 

temple

மகாபாரதத்தில் கர்ணன் எல்லா தானங்களையும் செய்தான். அன்னதானம் மட்டும் செய்யவில்லை. இதனால் கர்ணனுக்கு சொர்க்கத்தில் உணவு கிட்டாமல், வருந்தினான் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமான் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய அன்னபூரணியிடம் பிட்சை எடுத்தார் என புராணம் கூறுகிறது. தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம். அதை நம்மால் முடிந்தவரை செய்யவேண்டும். "வாய் வாழ்த்த வில்லையென்றாலும் வயிறு வாழ்த்தும்' என்பது பழமொழி. நம்மால் முடிந்தவரையில் தர்மசாஸ்திரம் கடைப்பிடிக்கவேண்டும்.