பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
மனிதன் தன் வாழ்வை சாதகமாக மாற்றியமைத்துக்கொள்ள இறைவன் அளித்த வரப்பிரசாதமே முகூர்த்தம். முகூர்த்தம் என்றால் நம் வாழ்வின் சில முக்கிய நிகழ்வுகளுக்கு நேரம் பார்த்தல் என்று எடுத்துக்கொள்ளலாம். எந்த ஒரு செயலும் தொடக்கம் நன்றாக இருந்துவிட்டால் வெற்றி நிச்சயம். இதை பிரபஞ்சம் நமக்குக் கொடுத்த பரிசு, பரிகாரம் என்றும் கூறலாம்.
ஒரு முகூர்த்தம் என்பது வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களின் தொகுப்பாகும். மனித வாழ்வில் விதியை நிர்ணயம் செய்யும் ஜோதிடத்தின் மூன்று அடிப்படைக் கூறுகளில் ஒன்றான நட்சத்திரம் பெரும்பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட நட்சத்திரங்களில்தான் சில காரியங்கள் செய்யவேண்டுமென நியதியை வகுத்துள்ளனர்.
உக்கிர சுபாவமுடைய அதிதேவதைகளைக் கொண்ட நட்சத்திரங்களில் எந்த காரியமும் செய்யக்கூடாது. 27 நட்சத்திரங்களுக்கும் muruganஅதிதேவதைகள் உண்டு. இந்த தேவதைகள் நல்லவர்களாகவும், உக்ரமானவர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அவற்றை மனதில் கொள்ளத்தக்க விதத்தில் ஒரு பாடல் கீழே...
கூடாத நட்சத்திரங்கள்:
"ஆதிரை பரணி கார்த்தி ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராறும்
மாதனங்கொண்டார் தாரார் வழிந
டைப்பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின் வாய் தேரை தானே.'
விளக்கம்: பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கடனாகக் கொடுத்தால் திரும்ப வராது. பயணம் சென்றவர் வீட்டிற்குத் திரும்பி வரமாட்டார். வியாதியுடன் படுக்கையில் படுத்தவர் குணமடைய மாட்டார்.
இந்த பன்னிரண்டு நட்சத்திரங்களும் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு அந்த நட்சத்திரங்களின் அதிதேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்களாக இருப்பதே காரணம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நட்சத்திரங்களின் அதிதேவதைகள்:
பரணி- எமன்; கார்த்திகை- அக்கினி; திருவாதிரை- ருத்திரன்; ஆயில்யம்- ஆதிசேஷன்; பூரம்- பார்வதி; பூராடம்- வருணன்; பூரட்டாதி- குபேரன்; கேட்டை- இந்திராக்கினி; விசாகம்- குமரன்; சித்திரை- விஸ்வகர்மா; சுவாதி- வாயு; மகம்- பித்ரு தேவதைகள். ஒரு சுபகாரியத்திற்கு நாள் குறிக்கும்பொழுது மேற்கண்டவற்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். நம் அன்றாட நிகழ்விற்கு இதைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
கொடுத்த பணத்தை வசூல் செய்ய முடியாமல் மனவேதனைப்படுவர்கள், தாங்கள் பணம் கொடுத்த நாளை சரிபார்த்தால் மேலே உள்ள நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நாளாகத்தான் நிச்சயம் இருக்கும். அன்றாடம் பணம் கொடுக்கல்- வாங்கலில் இருப்பவர்கள் இதைக் கணக்கிட வேண்டியதில்லை. இந்த நட்சத்திர நாட்களில் நகையையும் அடமானம் வைக்கக்கூடாது. சிறுசிறு உடல் உபாதைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்ல இந்த நட்சத்திரங்களைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கும் பார்க்கக்கூடாது.
அறுவை சிகிச்சை, முதன்முறையாக ஒரு பெரிய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தல் போன்ற காரணத்திற்குப் பார்க்கலாம். அன்றாடப் பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் இதைப் பார்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் தீர்த்த யாத்திரை செல்லுதல், அயல்நாடு செல்லுதல், அண்டை மாநிலம் செல்லுதல் தொடர்பாக தாராபலம் உள்ள நட்சத்திரமாகத் தேர்வு செய்து பயணம் செய்யலாம்.