மனிதர்களுக்கு பொதுவாக நல்ல நண்பர்கள்- ஆபத்து நேரத்தில் உதவும் நண்பர்கள் கிடைக்க வேண்டும். நல்ல அறிவுரையும், ஆலோசனைகளும் கிடைக்கவேண்டும். பிரச்சினைகள் உண்டாகும்போது கைகொடுக்கும் நண்பர்கள் வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதியும் 3-க்கு அதிபதியுமான கிரகமும் அவருடைய நண்பரின் நிலையைக் குறிக்கும். 3-ஆம் பாவத்திற்கு அதிபதி நல்ல நிலையில் இருந்து, அதை குரு பார்த்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். ஜாதகத்தில் 3-ஆம் பாவம் கெட்டுப்போனால் அல்லது 3-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக இருந்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள். 3-ஆம் பாவத்திற்கு பாவ கிரகப் பார்வை இருந்தாலும், அந்த இடத்தில் பாவ கிரகம் இருந்து இன்னொரு பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள். கிடைத்த நண்பர்கள் அவரிடமிருந்து பலனைப் பெற்றுவிட்டு ஓடிவிடு வார்கள். 3-ஆம் பாவாதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நண்பர்களைப்போல வந்து அவரிடமிருந்து பொருளை அபகரித்துவிட்டு, அவரை ஏமாற்றி விடுவார்கள்.
ஒரு ஜாதகத்தில் 3-க்கு அதிபதி 2 அல்லது 6-ல் இருந்தால், நண்பர்களே அவருக்கு மறைமுகப் பகைவர்களாக இருப்பார்கள். 3-ஆவது பாவத்தில் கேது இருந்து, அதை 6-ல் இருக்கும் சனி பார்த்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அவரிடம் காரியத் தைச் சாதித்துக்கொண்டு அவரை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் 3-க்கு அதிபதி 4-ல் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு நல்ல நண்பர்கள் இருக்கமாட்டார்கள். 4-ல் கேது, செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவருக்குக் கிடைக்கும் நண்பர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். 3-ல் ராகு, 4-ல் சூரியன் இருந்தால், அவர் தன் நண்பர்களால் ஏமாற்றப் படுவார். 3-ல் ராகு, சுக்கிரன், 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், அவருடைய நண்பர்கள் அவரின் புகழைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். தசாகாலம் சரியில்லாமல் இருந்தால், அவர்கள் அவரை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிடு வார்கள். சிலர் அவருக்கு சூனியமும் செய்வார்கள். 3-ல் ராகு, 6-ல் செவ்வாய், 10-ல் சனி இருந்தால், அவருடைய நண்பர்கள் அவரின் குடும்பத்தாருடன் சேர்ந்து அவருக்கு விரோதிகளாக மாறுவார்கள்.
அவர்களால் பல தடைகளும் பிரச்சினைகளும் உண்டாகும். 3-க்கு அதிபதி 6 அல்லது 12-ல் இருந்து, லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 10-க்கு அதிபதி பலவீனமாக இருந்தால், அவர் எந்த இடத்திலும் வேலைசெய்ய மாட்டார். அங்கிருக்கும் நண்பர்கள் விரோதிகளாக மாறி, அவரைப் பற்றி தாழ்வாகப் பேசுவார்கள். சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய் 6 அல்லது 12-ஆவது வீட்டில் இருந்தால், அவருடைய நண்பர்கள் அவரை ஏமாற்றிவிடுவார்கள். அல்லது பெண் மோகத்தை அவருக்கு உண்டாக்கி, சொத்துகளை ஏமாற்றி அபகரித்துவிடுவார்கள். ஜாதகத்தில் புதன் லக்னாதிபதியாக இருந்து, அத்துடன் சுக்கிரன் இருந்து, செவ்வாய், சூரியன் 6, 12-ல் இருந்தால், இளம்வயதில் அவருக்கு சரியான நண்பர்கள் இருக்கமாட்டார்கள். அல்லது அவர்கள் அவரைத் தவறான வழிகளில் அழைத்துச்சென்று சொத்து களை அபகரித்துவிடு வார்கள். பல நண்பர்கள் அவரின் படிப்பில் பிரச்சி னையை உண்டாக்குவார்கள். லக்னத்தில் செவ்வாய், 2-ல் கேது, 3-ல் சந்திரன், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவருக்கு சரியான நண்பர்கள் இருக்கமாட்டார்கள். கிடைத்த நண்பர்களும் உண்மையானவர்களாக இல்லாமல், அவரைத் தவறான வழியில் அழைத்துச்சென்று அவமானத்திற்குள்ளாக்குவார்கள்.
பரிகாரங்கள் :
நல்ல நண்பர்கள் கிடைப்பதற்கு தினமும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வடக்கு திசையில் வைத்து பூஜை செய்யவேண்டும். வீட்டில் தினமும் "ஓம் கங்க் கணபதயே நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கூறவேண்டும். அடர்த்தியான நீலம், ப்ரவுன், கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. மாலை வேளையில் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். வீட்டில் வடக்குச் சுவரில் பச்சை வண்ணம் இருக்கக்கூடாது. வீட்டின் தென்மேற்கு திசையில் ஜன்னல்கள், கதவுகள் இருந்தால் அதை மூடி வைக்கவேண்டும்.