Skip to main content

கோடைத் திருவிழா கொண்டாட்டங்கள்; 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேரோட்டம்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

Chariot festival held in Pudukottai after 12 years

 

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை மாணவர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் கிராமங்களில் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை. கலை நிகழ்ச்சிகள், பால் குடம், காவடி, தேரோட்டம், தீர்த்தம் (மஞ்சள் நீரூற்று), தெப்பம், ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கை, கிடாக்கறி விருந்து எனக் கிராமங்கள் விழாக் கோலங்களில் ஜொலிக்கிறது. பகலில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் இரவில் திருவிழா கொண்டாட்டங்களால் வெயிலை மறந்து போகிறார்கள். அதிலும் பல வருடங்களாக நடக்காத திருவிழாக்கள் இப்போது நடப்பதில் அந்த கிராம மக்களும் இளைஞர்களும் பேரானந்தமாக உள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. கேட்ட வரங்களைக் கேட்டவுடன் கொடுக்கும் அம்மனாக பெயர் பெற்றதால் அரசியல் பிரபலங்கள் கூட அடிக்கடி வந்து செல்லும் தலமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 12 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் அலங்கார ஆராதனைகளுடன் மலர் அலங்கார வாகனங்களில் வீதி உலாவும், வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் பால் குடம் எடுத்து தரிசனம் செய்தனர்.

 

Chariot festival held in Pudukottai after 12 years

 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்தது. தொடர்ந்து 22 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை நடந்த தீர்த்த திருவிழாவில் மாமன் மச்சான்கள் மஞ்சள் தண்ணீரைத் தெளித்து உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக இருக்க பெண்கள் மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வலமாக வந்து தீர்த்த ஊரணியில் அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி குளிர்வித்தனர். 24 ஆம் தேதி புதன் கிழமை இரவு தெப்பக் குளத்தில் மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பச்சைப் பட்டுடுத்தி அம்மன் வீற்றிருக்க இளைஞர்கள் தண்ணீரில் இறங்கி இழுத்துச் செல்ல தெப்பத் திருவிழாவும் நடந்தது.

 

கோடைக் காலத் திருவிழாக்கள் குறித்து கிராமப் பெரியவர்கள் கூறும்போது, தமிழர்களின் எந்த ஒரு விழாக்களும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கோடை தொடங்கும் போது விவசாயம் இருக்காது. விவசாயிகளுக்கு நேரம் போகாது. வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் வெக்கை அதிகமாக இருக்கும் வீட்டில் தூங்க முடியாது. அதனால் வேனல் காலத்தில் திருவிழாக்களை நடத்தி கலைநிகழ்ச்சிகள் வைத்து மகிழ்ந்தனர். அம்மனுக்காக பொங்கல் வைத்தாலும் உறவுகளுக்கு விருந்து வைக்க கிடா வெட்டி உணவளித்து உபசரித்தனர். வேனல் கால நோய்களில் இருந்த தற்காத்துக் கொள்ள தீர்த்தம் (மஞ்சள் நீரூற்று) திருவிழாக்களை நடத்தி மாமன் மச்சான் உறவுகள் மாறி மாறி மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொள்வதால் கிருமி அழிந்து நோய்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டனர். இப்படி நம் முன்னோர்களின் விழாக்கள் அர்த்தங்கள் நிறைந்ததாகவே உள்ளது என்றனர்.

 

 

 

Next Story

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சிலைக்கு மரியாதை செலுத்திய மருத்துவக்கல்லூரி முதல்வர்!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
medical college principal paid respect to statue of Dr. Muthulakshmi Reddy

முதல் பெண் மருத்துவர், சென்னை மாகாணத்தின் முதல் சட்ட மேலவை உறுப்பினர் என்று பல்வேறு "முதல்" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. 1886 ஜூலை 30 ம் நாள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற தடைகளை உடைத்து கல்லூரிச் சென்று படித்து மருத்துவரானார். 

தொடர்ந்து தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தை திருமணத் தடுப்பு, விதவை மறுமணம் செய்யவும் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கவும் போராடினார். பெண் கல்வி, உரிமைக்காக போராடியவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக காரணமான இவர் 1968 ஜூலை 22 ந் தேதி மறைந்தார். 

இவரது நினைவை போற்றும் விதமாக புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மாவட்ட மருத்துவமனை இயங்கியது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. அந்த வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை வைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று(22.7.2024) அவரது நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வர் டாக்டர் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

Next Story

“ஒரு அரசியல் தலைவர் உயிரிழப்பார்” - அருள் வாக்கு சொன்ன கோவில் பூசாரி

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
temple priest predicts that the political leader will lost life

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசல் குடியிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற "வழிவிடும் கருப்பசாமி கோயில் உள்ளது. தினசரி பக்தர் வந்து போனாலும் ஆடி பௌர்ணமி திருவிழாவே மிகச் சிறப்பு. இந்த நாளில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுகிறார்கள்.

ஆடி பௌர்னமி திருவிழாவில் என்றதும் மீமிசல் சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் ஏம்பக்கோட்டை ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து வானவேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பால்குடம் மற்றும் பறவை காவடி, அலகுகாவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கருப்பசாமி கோவிலை வந்தடைந்தனர். அங்கு கருப்பசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து கருப்பசாமி அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் பூசாரி மாதவன் அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமி ஆடி முதலில் நாட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று நாட்டுக்கான நல்வாக்கு சொல்லத் தொடங்கினார்.

temple priest predicts that the political leader will lost life

இந்த வருசம் விளைச்சல் அதிகமாகும், ரியல் எஸ்டேட் தொழில் நல்லா இருக்கும். இந்த ஆண்டு ஒரு அரசியல் தலைவர் உயிர் சேதம் ஏற்படும். போன வருசம் சொன்னேன் நடந்துச்சு அதுபோல ஒரு உயிர்சேதம் ஏற்படும். கண் நோய் வரும், வைரஸ் காய்ச்சல் வரும் கருப்பசாமி காப்பாத்திக் கொடுக்கிறேன். விலைமதிக்கக் கூடிய சிலைகள் கண்டெடுக்கப்படும், தங்கம் விலை குறையும், கும்பாபிசேகங்கள் அதிகம் நடக்கும், ஒரு அரசியல் குடும்பம் தடுமாறும், டாக்டர் எக்சாம்ல மதிப்பெண்ல குழப்பம் ஏற்படும். கவர்மெண்ட் வேலை நிறைய கிடைக்கும் 16 கலெக்டர்கள் பாசாவாங்க. நகைக்கடன் தள்ளுபடி வரும். மழை கம்மியாவும், இடி காற்று அதிகமாவும் இருக்கும்" என்று நாட்டுக்கான அருள்வாக்கு சொல்லி முடித்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.கருப்பசாமி கோயில் பூசாரி நாட்டுக்கான அருள்வாக்கு சொன்னது எப்படி நடக்குமோ என்ற குழப்பத்துடன் சென்றனர் பக்தர்கள்.