
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மலைப் பாதையில் மிக்ஜாம் புயல் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை (14.12.2023) முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் படி வழியினை மட்டுமே பயன்படுத்த கோயில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையின் தடுப்புச் சுவர் மிக்ஜாம் புயல் காரணமாக மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதையின் தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக அனைத்து ரக வாகனங்கள் செல்ல 11.12.2023 முதல் 16.12.2023 வரை தடை விதிக்கப்பட்டு மலைப்பாதை மற்றும் படி வழியில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இலேசாக மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மலைப் பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதியில்லை. நாளை (14.12.2023) முதல் டிசம்பர் 20 ஆம் தேதி (20.12.2023) வரை பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல படி வழியினை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள கோயில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.