ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் பொருளாதார வெற்றிக்கு என்ன பரிகாரங்களைப் செய்ய வேண்டும் என்று ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
பெரும்பாலான ஜோதிடர்கள் குருவை தனகாரகன் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. குருவுடைய வீடு தனுசு, குரு நீட்சமடைவது மகரத்தில், குருவின் மற்ற வீடு மீனம். அந்த மகரம் மீனத்திற்கு 11வது இடமாகவும் தனுசுக்கு 2வது இடத்திலும் இருக்கிறது. இவ்வாறு இருக்கும்போது தன ஸ்தானத்திலும் லாப ஸ்தானத்திலும் நீட்சமடையும் கிரகம் எவ்வாறு தனகரனாக அமைய முடியும். கால புருஷ லக்னம் 9 மற்றும் 12ஆவது இடத்தில் இருக்கிறது. கால புருஷன் இருக்கக்கூடிய வீடு மகரத்தில் நீட்சமான இடம்தான் 11 மற்றும் 2 என்ற லாப ஸ்தானமாக அமைகிறது.
குரு பலன் இருந்தால் பணம் கொட்டும் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஜோதிடத்தில் ஓரளவிற்கு பகுத்தறிவை உபயோகப்படுத்தி ஆராய வேண்டும். ஏற்கனவே சொல்லப்பட்டது என்பதால் அதெல்லாம் உண்மை என்று நினைக்க கூடாது. சந்திரனையும் சுக்கிரனையும் தனகாரகன் என்று சொல்லலாம். அதற்கு காரணம் தங்கத்திற்கு தினம் ஒரு விலை இருக்கும். அப்படியென்றால் மாறக்கூடிய நிலையில் உள்ளவர்களைத்தான் தனகாரகன் என்று சொல்ல முடியும். தினம் மாறக்கூடிய இடத்தில் இருப்பது சந்திரன் தான். கால புருஷன் 2ஆவது இடத்திலும்(தன ஸ்தானம்) அதற்கு சொந்த ராசியான கடகத்திற்கு 11ஆவது இடத்திலும்(லாப ஸ்தானம்) இருக்கக்கூடிய சந்திரனே தனகாரகன்.
ரிஷப ராசி 2ஆவது இடமாக அமைவதால் அது தன ஸ்தானம் ஆகியது. அந்த தன ஸ்தானத்தின் அதிபதியான சுக்கிரனை தனகாரகன் என்றாலும் ஒப்புக்கொள்ளலாம். அதேபோல் 2ஆவது இடமாகி ரிஷபத்தில் உச்சம் அடையக் கூடிய சந்திரனை தனகாரகன் என்றாலும் ஒப்புக்கொள்ளலாம். எனவே தனகாரனை வேண்டிக்கொள்ள நினைப்பவர்கள் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும்தான் பரிகாரம் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு குரு பரிகாரம் செய்வதன் மூலம் பயன் இருக்காது. குருவை புத்திக்காரர் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளலாம். காரணம் என்னவென்றால் மீனத்திற்கு 5ஆம் இடத்தில் உச்சம். அதற்கு சொந்த ராசியான தனுசுக்கு 8ஆம் இடத்தில் உச்சம். 8 என்பது அந்தரங்க வாழ்க்கை. 5 என்பது புத்திர பாக்கியம். இந்த இரண்டு இடத்திற்கும் காரணமானவர் குரு என்று சொன்னால் ஒப்புக்கொள்ளலாம். யார் எந்த இடத்தில் உச்சம் அடைகிறாரோ அதற்கேற்ப தான் காரகன் வருவார்கள்.
புதன் மிதுன ராசியின் அதிபதி. அவர் 4ஆம் இடத்தில் கன்னியில் உச்சம் அடைகிறார். 4 என்பது கல்வியைக் குறிக்கும். உச்சம் என்பது ஒரு கிரகத்தின் அதிகாரம் பெற்ற வீடு என்பதை அறிந்தால்தான் எந்த கிரகம் எதற்கு காரகமாக அமையும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்தணர் குருவிடம் இருந்து பொருளைப் பெற முடியாது என்பது பொதுவான விதி. வைசியரான சுக்கிரனுக்கு பொன்னும் பொருளும் தருவதற்கு அதிகாரம் இருக்கிறது. அதேபோல் சந்திரனும் அதிகாரமுடையவராகவும் தனகாரகனாகும் அமைகிறார்.
செல்வம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சுக்கிரனையும் சந்திரனையும் துதிக்க வேண்டும். குருவை வேண்டினால் எந்த முன்னேற்றமும் இருக்காது. முதல் தரமான தனகாரகன் சந்திரன் தான். மூன்றாம் பிறைச் சந்திரனை தரிசனம் செய்தால் எல்லா விதமான செல்வமும் வரும். இதுதான் பரிகாரத்திற்கான தன்மை. நிலைக் கண்ணாடி முன் பூக்கள் மற்றும் பழங்களை வைத்து வழிபடும்போது சந்திரனின் அனுக்கிரகம் கிடைக்கும். நிலைக் கண்ணாடியும் சந்திரனும் ஒரே மாதிரியான வேலையைச் செய்கின்றனர். எனவே பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் சந்திரனையும் சுக்கிரனையும் வழிபட வேண்டும் என்றார்.