ஓம் சரணவனபவ யூடியூப் சேனல் வாயிலாக ஆன்மிக கருத்துகளை ஆன்மிகவாதிகள் பலர் பேசி வருகின்றனர், அந்த வகையில் எளிய முறை பரிகாரங்களைப் பற்றி ‘கந்தர்வ நாடி’ ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன் தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
மனிதர்களின் ஆசை நிறைவேறாமல் இருப்பது பலவிதமான சங்கடங்களை உருவாக்கும். உதாரணத்திற்கு கல்வி, பணம், கடன், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஒரு மனிதருக்கு வந்தால் அது அவரின் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒழுங்காக நடக்க வேண்டிய நிகழ்வுகள் அந்தத்தந்த காலத்தில் நடக்கவில்லையென்றால் எல்லோருக்கும் மனக் கலக்கம் உண்டாகும். எளிமையான பரிகாரம் மூலம் மேற்கண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஏனென்றால் கடவுள் விரும்புவது எளிமையான பரிகாரங்களைத்தான்.
புராணக் கதைகளில் கிருஷ்ணரைத் துலாபாரத்தில்(தராசு) நிறுத்தி மற்றொரு பக்கம் பொன்னையும், பொருளையும் வைப்பார்கள். ஆனால் துலாபாரம் சரியான நிலைக்கு வராது. அதன்பிறகு ஒரே ஒரு துளசியை துலாபாரத்தில் வைப்பார்கள் கிரிஷ்ணருக்கு நிகராக வந்துவிடும். அதுபோல மன திருப்தியுடன் செய்யும் சிறிய பரிகாரங்களைத்தான் கடவுள் விரும்புவார். எனவே அதிக பணம் செலவழித்து பெரிய ஹோமங்களைச் செய்வதால் மட்டுமே நன்மை வந்துவிடாது. பரிகாரம் என்பது எளிமையாக இருக்க வேண்டும்.
விருட்ச பரிகாரங்களைச் செய்வது எளிமையான பரிகாரங்கள். வாழை மரத்தை நட்டு வைத்தால் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். இதனால்தான் எல்லா விஷேச காரியங்களில் வீட்டின் முன் வாழை மரத்தை வைக்கின்றனர். வாழை மரத்தை வைப்பதால் வாழையடி வாழையாக அந்த குலம் தளைக்கும். இதுதான் வாழை மரத்தின் விஷேசம். அரச மரத்தை வளர்ப்பதன் மூலம் அறிவில் முன்னேற முடியும். கல்வியில் பின் தங்கியவர்கள் அரச மரத்தை நடுவதன் மூலம் நன்மை அடையலாம்.
வன்னி மரத்திற்கு பெயர் குபேர மரம். அந்த மரத்தைச் சுற்றி வந்து தொழுவதன் மூலம் ஒருவருக்கு சகலவித பணப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். வெள்ளிக்கிழமை வன்னி மரத்தை வழிபட்டால் உங்களுக்கு இருக்கும் தரித்திரம் நீங்கிவிடும். வில்வ மரத்தின் இலைகளை பணம் பெட்டியில் வைத்தால் குபேர சம்பத்து கிடைக்கும். மூவிதழ் உள்ள வில்வ இலைகளுக்கு பணத்தை ஈர்க்க கூடிய சக்தி உள்ளது. மனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பிலை நல்ல மருந்தாக இருக்கும். மனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வேப்பிலையை சேர்ப்பதன் மூலம் அவர்களிடையே முன்னேற்றம் காணப்படும்.
அரச மரம் மற்றும் ஆலமரத்திற்கு கீழ் ஒரு முறை பிரார்த்தனை செய்வது லட்சமுறை செய்வதற்கு சமம். ஒருவர் துளசிச் செடியை பெருமாள் கோயில் நந்தவனத்தில் நட்டு வளர்த்தால், அவர் மிகப்பெரிய செல்வந்தராக மாறிவிடுவார். பூஜை அறையில் துளசியை வைத்தால் சகல சம்பத்தும் கிடைக்கும். துளசி இருக்கும் இடத்தில் பெருமாள் இருப்பார் என்பது ஐதீகம். எனவே இதுபோன்ற சிறிய விருட்ச பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நன்மையடையலாம் என்றார்.