தமிழகத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் மிக முக்கியமானது திருச்செந்தூர். இந்தக் கோயிலின் அறங்காவலர் பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தன.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலின் அறங்காவலர்களாக 5 நபர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக இழுபறி இருந்த நிலையில், அதனை முடிவுக்கு கொண்டு வர அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில்முருகன், அனிதாகுமரன், ராமதாஸ், கணேசன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அருள்முருகன் ஆகியோரை நியமித்து அதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார் இந்து சமய அறநிலைய துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்.
இந்து சமய அறநிலைக் கொடைகள் சட்டத்தின்படி இவர்களது பதவி காலம் 2 ஆண்டுகள். அறங்காவலர்களாக பதவியேற்றதற்கு பிறகு 30 நாட்களுக்குள் தங்களுக்கான தலைவர் ஒருவரை (ட்ரஸ்டி சேர்மன்) தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், சேர்மன் பதவியைக் கைப்பற்ற 5 பேரும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினர். இந்த நிலையில், அறங்காவலர் குழுவின் தலைவராக (ட்ரஸ்டி சேர்மன்) சென்னையைச் சேர்ந்த அருள் முருகனை ஒருமனதாக தேர்வு செய்திருக்கிறார்கள் ட்ரஸ்டி உறுப்பினர்கள்.