ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ்ஜோதியானவன் சிவபெருமான். சிவனை வழிபடும் நெறியான சைவமே மிகப் பழமையான சமயம். எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முழுமுதற்கடவுளான சிவனை தென்னாட்டவராகிய தமிழர்கள் பெரிதும் போற்றினார்கள். இதனை-
"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
என்ற திருவாசகம்மூலம் உணரலாம். சைவமும் தமிழும் தழைத்தோங்க மடங்களும் ஆதீனங்களும் பெரிதும் பாடுபட்டன.புராணங்கள் பதினெட்டு, சித்தர்கள் பதினெட்டு போன்று சைவ ஆதீனங்கள் பதினெட்டு உண்டு. "சுத்த சைவ பதினெண் ஆதீனங்கள்' என்று கூறுவார்கள். பதினேழு ஆதீனங்கள் (மடம்) தமிழ்நாட்டிலும், ஒரு ஆதீனம் "வரணி ஆதீனம்' எனும் பெயரில் இலங்கை யாழ்ப்பாணத்திலும் உள்ளன. சைவ மடங்களில் முதலாவது திருவாவடுதுறை ஆதீனம். தேவாரப்பாடல் பெற்ற தலமான திருவாவடுதுறையில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு நமசிவாய மூர்த்தி என்பவரால் மடம் நிறுவப்பட்டது. பாரத நாடு சுதந்திரம் பெற்ற தருணத்தில் இவ்வாதீனம் செய்த மகத்தானப் பணி போற்றுதலுக்குரிய ஒன்றாகும். இது தமிழகத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு.
ஆதீன வரலாறு திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானிடமிருந்து சிவஞான உபதேசத்தை நந்திதேவர் (நந்தி) பெற்றார். அவர் அதை பல சிவஞானிகளுக்கும், முனிவர்களுக்கும், சிவனடியார்களுக்கும் உபதேசித்தார். நந்திதேவர் மரபில் வந்த பரஞ்ஜோதி முனிவர் மெய்கண்டாருக்கு சிவஞானத்தை உபதேசித்தார். இவரது இயற்பெயர் சுவேதவனப் பெருமாள். இவரால் எழுதப்பட்டதுதான் "சிவஞான போதம்' எனும் அற்புதமான நூல். இது ஒப்புயர்வற்ற சைவ சித்தாந்த சாத்திர நூலாகும். மெய்கண்ட தேவரை முதற்குருவாகக் கொண்டு ஒரு குரு பரம்பரை தமிழகத்தில் தோன்றியது. அவருக் குப் பின்பு சந்தானாச்சாரியார்கள் என போற்றப் படும் அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் போன்றோர் வழியில்வந்த சித்தர் சிவப்பிரகாசர், சிவஞான உபதேசத்தை மூவலூரில் அவதரித்த (புன்னாகவனம்) ஸ்ரீ நமசி வாய மூர்த்தி என்பவருக்கு அருளினார். இவர்மூலம் "அபிஷேக பரம்பரை' எனும் ஆதீன குரு பரம்பரை தோன்றி யது. திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமகா சந்நிதா னம் இவரே ஆவார்.திருக்கயிலாயப் பரம் பரைமூலமாகத் தோன்றிய ஆதீனம் என்பதால், "திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்'எனப் பெயர் ஏற்பட்டது.
இந்த ஆதீனத்தில் நான்காவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ உத்திரகோடி தேசிகர் அருளாட்சிக் காலத்தில், மதுரைப் பகுதியை அரசாண்ட சிற்றரசனான முத்து வீரப்பநாயக்கர் ஈசானத் தம்பிரான் பெயரில் ஆதீனத்திற்கு எட்டு மடங்களுக்கு வேண்டிய நிலங்களை அளித்தான். அதேபோன்று 1615-ல் சிவந்திபுரம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர் ஆகிய ஊர்களில் புதியதாக கிளை மடங்களை ஏற்படுத்த உதவி செய்தான். 1621-ல் நெல்லை ஈசான மடம் என்கிற கிளை மடம் உருவாக்கப்பட்டதாக ஆதீனத்தின் செப்பேடு தெரிவிக்கிறது.பன்னிரண்டாவது குருமகா சந்நிதானமான ஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் (1730-1770), இராமநாதபுர சமஸ்தானத்தில் மழையில்லாமல் மக்கள் துன்பப்பட்ட நேரத்தில் மழைப்பதிகங்களை மேகராகக் குறிஞ்சி ராகத்தில் .ஓதுவார்களைக் கொண்டு பாடச்செய்து மழையை வரவழைத்தார். இதனால் மகிழ்ந்த சேதுபதி மன்னர் திருப்பொற்கோட்டை என்ற ஊரை ஆதீனத்திற்கு 1733-ஆம் ஆண்டு வழங்கினார்.