Skip to main content

கோபத்தைத் தூண்டும் கிரகங்கள்!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சராசரி மனிதன் தன் அன்றாட வாழ்க்கையை நடத்துவதென்பது கடினமாக உள்ளது. அதுமட்டுமின்றி வேலைக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கிளில் சென்றவர் பைக்கில் செல்கிறார். பைக்கில் சென்றவர் காரில் செல்கிறார். நடைப்பயணம் மேற்கொண்டவர் ஆட்டோவில் பயணிக்கிறார். பொருளாதார நெருக்கடி எனக்கூறிவிட்டு, வாழ்க்கைத்தர உயர்வைக் கூறுகிறேன் என எண்ண வேண்டாம். நேரத்தை மிச்சப்படுத்த, உரிய நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்றடையத்தான் இந்த மாற்றங்கள்.
 

god

தற்போதுள்ள சூழ்நிலைகளில் வாகனங்களின் சத்தமும், அவற்றால் உண்டாகும் மாசுக்களும் மூச்சையே நிறுத்திவிடும்போல இருக்கிறது. யார் எங்கு செல்கிறார்கள்- எதற்காகப் பயணிக்கிறார்கள் என ஒன்றுமே புரியவில்லை. அதுமட்டுமின்றி காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும் ஒருவர் நல்லபடியாக வீடுவந்து சேர்ந்தால்தான் அன்றைய தினம் உண்மையாக வாழ்ந்ததற்கு அடையாளமாக இருக்கிறது. எத்தனை விபத்துகள்- எத்தனை உடலுறுப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலைகள்... என்ன கொடுமையிது என நினைத்து மனம் பதைக்கத்தான் செய்கிறது. அதிகமாக கோபப்படக்கூடிய ஒருவரிடம் நெருங்கிப்பழகவோ, நட்பு வைத்துக் கொள்ளவோ யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட குணநலன்கள் அமைவதற்கு ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதே காரணமாக இருக்கும். ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி அறிவதற்கு அவரின் ஜென்ம லக்னமாகிய ஒன்றாம் பாவம் உதவுகிறது. லக்னம் பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டால் கோபம் அதிகமாக வரும். நவகிரகங்களில் பாவ கிரகங்கள் என குறிப்பிடப்படுபவை சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியவையாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் பாவ கிரகங்களுக்கு சுபகிரகங்களின் பார்வை இருந்தால் கோபம் இருந்தாலும் நல்ல குணமும் இருக்கும். அதிகாரம் செய்யக்கூடிய ஆற்றலைத் தரும். சூரியனின் ராசியான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கும், சூரியன் ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சூரிய தசை நடப்பவர்களுக்கும் மேற்கூறிய பலன்கள் பொருந்தும். சூரியன் பாவிகளின் சேர்க்கைப் பெற்று ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் பலமிழந்திருந்தால், தேவையில்லாமல் கோபப்படும் நிலை, மற்றவர்களுடன் சண்டை போடக்கூடிய அவலநிலை, சமுதாயத்தில் கெட்ட பெயர். கௌரவக் குறைவு போன்றவை உண்டாகும்.

navakiragam god

ஜென்ம லக்னத்தில் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையுடன் செவ்வாய் அமையப்பெற்றிருந்தால் கோபம் அதிகம் வரும். அதன் தசாபுக்திக்காலங்களில் தேவையற்ற சிக்கல்களையும், சண்டை, சச்சரவுகளையும் சந்திக்க நேரிடும். அதுவே செவ்வாய் பலமாக அமைந்து சுபர் சேர்க்கை, பார்வையுடன் இருந்தாலோ, 10-ஆம் வீட்டில் பலமாக அமையப்பெற்றாலோ- கோபம் கொண்டவ ராகவும், அதிகாரம் செய்யக் கூடியவராகவும் இருந்தாலும் சிறந்த நிர்வாகத்திறமையும் அதிகாரப் பதவிகளை வகிக்கும் ஆற்றலும் இருக்கும். சனியின் ஆதிக்க ராசிகளான மகர, கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஒரு மாறுபட்ட குணாதிசயம் இருக்கும். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சனி ஜென்ம லக்னத்தில் அமையப் பெற்றவர்களுக்கும், சனி சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் கோபமிருந்தாலும் நியாயவாதியாகவும், குணசாலியாகவும் காரியவாதியாகவும் இருப்பர். சனி பாவகிரகச் சேர்க்கைப்பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்தால் முரட்டுத்தனம், பிடிவாத குணம், தவறான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். அதிலும் சனி, ராகு 10-ஆம் வீட்டில் அமையப்பெற்று, சனியின் தசாபுக்தி நடைபெற்றால் சட்டவிரோத செயல்களைச் செய்யக்கூடிய நிலை உண்டாகும்.

நவகிரகங்களின் கோபத்திற்கு அதிக காரணகர்த்தா யாரென்று பார்த்தால் ராகுதான். ஜென்ம லக்னம் அல்லது ஜென்ம ராசியில் ராகு அமையப் பெற்றால் அதிகம் கோபப்படக்கூடிய குணம் இருக்கும். முரட்டுத்தனம், ஆணவ குணம், அசட்டு தைரியம், அகங்கார குணம் யாவும் உண்டாகும். சுபர் பார்வை, சேர்க்கை பெற்றாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி சுபராக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக செயல்படும் அமைப்பு, பல்வேறு வகையில் வாழ்வில் உயர்வுகளை சந்திக்கக்கூடிய யோகம் உண்டாகும். பாவகிரகச் சேர்க்கை பெற்றாலும், ராகு நின்ற வீட்டு அதிபதி அசுபராக இருந்தாலும் அதிக முரட்டுத் தனம், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்பு, தன்னிலை மறந்து செயல்படும் சூழ்நிலை, பல தவறான செயல்களில் ஈடுபடும் நிலை உண்டாகும். கேது ஞானகாரகன் என்பதால் எதிலும் நிதானமாகச் செயல்படும் அமைப்பு உண்டாகும். சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அதுவே கேது, சனி அல்லது சந்திரன் சேர்க்கை பெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்களால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஒருவரது குணநலன்களை அவர்கள் பேசும் விதத்தைக்கொண்டு தெரிந்து கொள்ள முடியும். பேச்சுத்திறனைப்பற்றி அறிய உதவுவது 2-ஆம் பாவமாகும். 2-ஆம் பாவத்தில் சூரியன், செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் அதிகார குணமும், சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் வேகமும், மனதைப் புண்படுத்தக்கூடிய அளவுக்குப் பேசும் குணமும் உண்டாகும். மனிதராய்ப் பிறந்த நாம் முடிந்தவரை கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வதும் நல்லது. உரிய தியானங்கள், தெய்வப்பரிகாரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டால் எல்லாம் நன்மையே.