காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்தின் மலர்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால நூல்கள் சிறப்பாக தெரிவிக்கின்றன. இது சித்திரை மாதம் மட்டுமே மலரும் தன்மையுடையது. இந்த மரத்தின் அருகில் புராண காலத்தில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்கு காட்சியருளி அவனுக்கு மீண்டும் அரசாட்சியை வழங்கியதாக இத்திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அதனால் இங்கு வந்து வணங்குவோருக்கு உயர்ந்த பதவிகள், வளமான செல்வங்கள், சொந்த வீடு ஆகியன கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த திருக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் வந்து வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டு புகழடைகின்றனர். அந்த வகையில், நேற்று (28-04-24) ஞாயிறு விடுமுறை நாளையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே திருக்கோயிலுக்கு வந்து வரிசையில் நின்றனர். காலை 6 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பலவித மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
உற்சவர் முருகப்பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதனிடையே, காலையில் நடிகர் சரத்குமார் வருகைதந்து முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினார். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தரிசித்தார். பின்னர், ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், வஸ்திரம், மாலைகள், முருகன் படம் ஆகியன வழங்கப்பட்டன.
விடுமுறை நாளையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர். திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியவற்றை இணை ஆணையர இரா.வான்மதி, உதவி ஆணையர் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் அறிவுரையின் பேரில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் வழங்கினார்.