உலகிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இதற்காக அவருக்கு எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த அந்த திருநங்கை வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற நினைத்திருக்கிறார். வாடகைத்தாய் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தபோது, மருத்துவமனையை அணுகிய அவர், ‘என் குழந்தையை சுமக்கும் வாடகைத்தாய் தாய்ப்பால் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துவிட்டார். எனவே, அந்தப் பொறுப்பை நானே எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான சிகிச்சைகள் குறித்து விளக்குங்கள்’ எனக் கேட்டுள்ளார்.
பெயர் வெளியிடாத இந்தத் திருநங்கைக்கு வயது 30. ‘மவுண்ட் சினாய் சென்டர் ஃபார் ட்ரான்ஸ்ஜெண்டர் மெடிசின் அன்ட் சர்ஜரி’ என்ற மருத்துவமனையில் இதற்கான சோதனை நடைபெற்றுள்ளது. அதில் திருநங்கைக்கு எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் செய்யாமல், ஹார்மோன் மருந்துகள் மூலமாக பால் சுரப்பிகளை தூண்டியுள்ளனர் மருத்துவர்கள். வேறு சில சிகிச்சைகளும் அந்தத் திருநங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு துளிகளாக பால் சுரந்துள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு நாளொன்றுக்கு 8 அவுன்ஸ் வரை பால் சுரப்பதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு பால் சுரப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சனை இல்லை எனக்கூறியுள்ள மருத்துவர்கள், குழந்தை நல்ல உடல்நலனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.