அமெரிக்காவின் 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' நிறுவனம் தயாரிப்பில் உருவான, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் வரும் 2027ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது.
விண்வெளிக்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும், அங்கு கிடைக்கும் அனுபவத்தைப் பகிர வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்குக் கனவாக இருக்கும். இந்நிலையில், விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, ஒரு சில நிறுவனங்கள் விண்வெளிக்கு வருகிறவர்களை உபசரித்துத் தங்க வைப்பதற்கு ஹோட்டல்களை அமைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மக்களின் விண்வெளி பயணம் என்பது இனி ஒரு கனவு அல்ல. ஏனெனில், 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' நிறுவனமானது, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் ஒன்றை, வரும் 2027ஆம் ஆண்டில் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் விண்வெளிக்கு மிக விரைவில் சுற்றுலா செல்ல முடியும், இனி வரும் நாட்களில் புத்தாண்டு விடுமுறை நாட்களை விண்வெளிக்குச் சென்று செலவிட முடியும் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.
வாயேஜர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஹோட்டலில் 400 விருந்தினர்கள் வரை தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், ஜிம், பார், நூலகம், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு மையம் ஆகியவையும் இந்த ஹோட்டலில் இடம்பெற உள்ளது. இருப்பினும், ஹோட்டல் கட்டுமான செலவினை இதுவரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
இந்த விலை உயர்ந்த ஹோட்டலின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், இது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை வட்டமிடும். இந்த விண்வெளி நிலையம் ஒரு பெரிய வட்ட வடிவமாகவும், செயற்கை ஈர்ப்பு சக்தியை உருவாக்கிச் சுழலும் வகையிலும் இருக்கும். இதில் உருவாக்கப்படும் ஈர்ப்பு விசை, சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு ஒத்ததாக அமைக்கப்படும். மேலும் 2025ஆம் ஆண்டில் பூமியின் சுற்றுப்பாதையில் இதற்கான பயண நிலையம் ஒன்றையும் உருவாக்க அந்தநிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் 2027ஆம் ஆண்டு முதல் இந்த விண்வெளி ரிசார்ட் செயல்படக்கூடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' என்கிற கட்டுமான நிறுவனமானது, வாயேஜர் ஸ்டேஷன் என்ற பெயரில் விண்வெளி ஹோட்டலை அமைக்க நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்தது. அதன்படி, அந்நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில் விண்வெளி ஹோட்டல் கட்டுமான திட்டங்கள் முதன்முதலில் வெளியிட்டது. இந்நிலையில், அதன் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, வரும் 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் விண்வெளி ஹோட்டலை திறக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்த ஹோட்டல் 2025ஆம் ஆண்டு திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல், உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தாமதம் ஏற்பட்டதால், அதன் தொழில்நுட்ப வேலைகளில் ஏற்பட்ட தடை காரணமாகத் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் விடுமுறை நாட்களை விண்வெளியில் கழிக்க ஆர்வமாக இருப்பவர்கள், அங்கு சென்று மூன்று நாள் தங்குவதற்குத் தேவையான 5 மில்லியன் டாலர்களைச் செலுத்தி, தங்கள் அறையை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்கிறது இந்நிறுவனம்.