Skip to main content

உருமாறிய கரோனா வகைகள்: பெயர் சூட்டிய உலக சுகாதார நிறுவனம்!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

corona variants

 

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ், பல்வேறு உருமாற்றங்களை அடைந்துவருகிறது. அப்படி உருமாறிய கரோனா வகைகள், அறிவியல் பெயரில் அழைக்கப்படாமல், எந்த நாட்டில் முதலில் கண்டறியப்பட்டதோ அந்தந்த நாடுகளின் பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், சிங்கப்பூர் கரோனா என ஒரு ட்விட்டில் குறிப்பிட, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் B.1.617.2 என்ற உருமாறிய கரோனவை இந்திய கரோனா என அழைப்பதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

 

இந்தநிலையில், உருமாறிய கரோனா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உலக சுகாதார நிறுவனம் உருமாறிய கரோனாவிற்கு கிரேக்க எழுத்துகளைக் கொண்டு பெயரிட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1  மற்றும் B.1.617.2 உருமாறிய கரோனா வகைகளுக்கு முறையே கப்பா, டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது.

 

முதன்முறையாக பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவிற்கு  'ஆல்ஃபா' எனவும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவிற்கு 'பீட்டா' எனவும், பிரேசிலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவிற்கு 'காமா' எனவும், அமெரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவிற்கு 'எஃப்சிலன்' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 

 

இந்தப் பெயரிடுதல், அறிவியல் தொடர்பற்றவர்கள் கூட உருமாறிய கரோனாக்கள் குறித்து விவாதிப்பதை இன்னும் எளிதாகவும், மேலும் சாத்தியமுள்ளதாகவும் ஆக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்