தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 38 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம், தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த ஒமிக்ரான் கரோனாவால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே ஒமிக்ரான் பரவலையொட்டி, சில நாடுகள் மக்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து ஆலோசனையை தொடங்கியுள்ளன. இந்நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் உலக சுகாதார நிறுவனத்தினுடைய மூலோபாய ஆலோசனை நிபுணர்குழு கூட்டத்தில், கரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ்களின் தேவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, பூஸ்டர் டோஸ்கள் மீதான இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மூலோபாய ஆலோசனை நிபுணர்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தற்போதுவரை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பூஸ்டர் டோஸ்களை செலுத்துவதை எதிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.